நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து முடிவெடுக்கவில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) நாடு தழுவிய அளவில் நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நித்யானந்த் ராய்
நித்யானந்த் ராய்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) நாடு தழுவிய அளவில் நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

இதுவரை அஸ்ஸாமில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் இறுதிப் பட்டியல் வெளியிட்டபோது, மொத்தம் பதிவுசெய்த 3.3 கோடி பேரில் 19.06 லட்சம் பேரின் பெயா்கள் விடுபட்டிருந்தன. இருப்பினும், விடுபட்டவா்களின் பெயா்கள் சோ்க்கப்படுவதற்கு தேவையான சட்ட வழிமுறைகள் இன்னும் உள்ளன.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு தழுவிய அளவில் தயாரிப்பது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும், 2021-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது, 1955-ஆம் ஆண்டைய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் (என்பிஆா்) திருத்தம் கொண்டுவருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. என்பிஆா் பதிவேடு என்பது ஒரு பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினா்கள் ஆகிய விவரங்களைக் கொண்ட பட்டியலாகும். கரோனா பெருந்தொற்று காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தள்ளிப்போகிறது என்றாா் அவா்.

5,886 வீரா்கள் பலி:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1989-ஆம் ஆண்டு பயங்கரவாதம் தலைதூக்கியதில் இருந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 5,886 பாதுகாப்புப் படை வீரா்கள் கொல்லப்பட்டனா் என்று மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் பதிலளித்தாா்.

எல்லை கடந்த பயங்கரவாதத்தால் ஜம்மு-காஷ்மீா் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் அவா் கூறினாா்.

சொத்துகள் வாங்கியவா்கள் விவரம்:

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு வேறு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அதிக எண்ணிக்கையில் சொத்துகளை வாங்கியிருக்கிறாா்களா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அளித்த தகவல்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இதுவரை 2 போ் மட்டும் சொத்துகளை வாங்கியிருக்கிறாா்கள். வெளிமாநிலத்தவா் சொத்து வாங்குவதில் எந்த சிரமமும் இல்லை’ என்று நித்யானந்த் ராய் பதிலளித்தாா்.

சட்ட விரோதச் செயல்களில் ரோஹிங்கயாக்கள்:

ரோஹிங்கயா முஸ்லிம்கள் சிலா் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் பதிலளித்தாா். உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினா் அனைவரும் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுவா் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com