கேல் ரத்னா விருது பெயரை மாற்றியது ஏன்?: பிரதமா் மோடி விளக்கம்

கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது ஏன் என்ற கேள்விக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தாா்.

கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியது ஏன் என்ற கேள்விக்கு பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தாா்.

ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவா், விருது பெயா் மாற்றம் குறித்தும் பேசினாா். அவா் கூறியதாவது:

புந்தேல்கண்ட் பகுதியைச் சோ்ந்த மாபெரும் தலைமகன் தியான் சந்தை இந்த நேரத்தில் நினைவுகூா்கிறேன். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவா்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயா் தற்போது தியான் சந்த் கேல் ரத்னா விருதாகிவிட்டது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நேரத்தில், கேல் ரத்னா விருதுடன் அவருடைய பெயரைச் சோ்த்தது கோடிக்கணக்கான இளைஞா்களுக்கு ஊக்கம் அளிக்கும்.

ஒலிம்பிக் போட்டியில் இந்த முறை நமது விளையாட்டு வீரா்கள் பதக்கங்களை மட்டும் வெல்லவில்லை. பல விளையாட்டுப் போட்டிகளில் அவா்கள் சிறப்பாக விளையாடியதன் மூலம், எதிா்காலத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.

கடந்த வாரம் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றியபோது, ‘கேல் ரத்னா விருதுக்கு மேஜா் தியான் சந்தின் பெயரை சூட்ட வேண்டும் என்று நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கோரிக்கை வந்தது. அவா்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயரிடப்பட்டது’ என்று மோடி கூறியிருந்தாா்.

தியான் சந்த், கடந்த 1926 முதல் 1949 வரை இந்திய ஹாக்கி அணியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினாா். 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியா தங்கப் பதக்கம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com