பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம்

பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவழக்குகளின் விவரங்களை வெளியிடாத விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்பட 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது
பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம்

பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவழக்குகளின் விவரங்களை வெளியிடாத விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்பட 8 கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

குற்றவழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோா் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை அனைத்து கட்சிகளும் தங்கள் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டது.

அந்த விவரங்களை செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, வேட்பாளா்களின் குற்றவழக்கு விவரங்களை வெளியிடுவது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிகாா் பேரவைத் தோ்தலின்போது சில கட்சிகள் பகுதியாகக் கடைப்பிடித்ததாகவும், சில கட்சிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

உச்சநீதிமன்ற உத்தரவை பகுதியளவு கடைப்பிடிக்காத பாஜக, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்காத மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனா்.

அபராதத் தொகையை இந்தியத் தோ்தல் ஆணையத்தின் கணக்கில் 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சிக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com