அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பழங்குடியினர் கிராமம் தத்தெடுப்பு: சிறந்த கல்வி அளிக்கவும் ஏற்பாடு

ஆசிரியர்கள் பழங்குடியினர் கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வி மற்றும் பல்வேறு வசதிகள் செய்து தரவும் முன்வந்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரெங்காபுரம் இருளர் காலனியில் மாணவர்களை தேடிச்சென்று கற்பிக்கும் ஆசிரியர் குழு.
ரெங்காபுரம் இருளர் காலனியில் மாணவர்களை தேடிச்சென்று கற்பிக்கும் ஆசிரியர் குழு.

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பழங்குடியினர் கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வி மற்றும் பல்வேறு வசதிகள் செய்து தரவும் முன்வந்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், சதுரங்கபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  பூண்டி ஒன்றியத்தில் பல்வேறு பழங்குடியினர் கிராமங்கள் உள்ளது. அதனால், இப்பள்ளி ஆசிரியர்கள் பழங்குடியினர் கிராமத்தை தத்தெடுத்து, அங்குள்ள மாணவ, மாணவிகளை பள்ளிகளில் சேர்த்து சிறந்த கல்வி அளிப்பதோடு, கிராமத்தில் உள்ளவர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்து தரவும் முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில், பூண்டி அருகே உள்ள ரெங்காபுரம் இருளர் காலனியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதனால், இக்கிராமத்தை ஆசிரியர்கள் தத்தெடுத்து எலைட் ரோட்டரி சங்கம் மூலம் பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும், கரோனா கால கட்டத்தில் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் இருந்தவர்களுக்கு உணவு பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் வழங்கினர்.

அதோடு, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாம்சன் இளங்கோவன் தலைமையில் ஆசிரியர்கள் உமாசங்கர், ராஜேந்தின், ராஜகுமாரி, சங்கீதா, சூர்யா, சாமுவேல் மற்றும் கிசோர்குமார் ஆகியோர் கொண்ட குழு, இருளர் காலனிக்கு நேரில் சென்று நோட்டு புத்தகங்கள் வழங்கி பாடவாரியாக பாடங்கள் கற்பிக்கவும் வழிவகை ஏற்படுத்தியுள்ளனர். அப்போது, பழங்குடியினர் மாணவ, மாணவிகளிடம் கல்வி தொலைக்காட்சியின் அவசியம் குறித்தும், அனைவரும் கட்டாயம் பார்க்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

ரெங்காபுரம் இருளர் காலனியில் மாணவர்களை தேடிச்சென்று கற்பிக்கும் ஆசிரியர் குழு.

அப்போது, கல்வி தொலைக்காட்சியில் பார்த்த பாடங்களுக்கான சந்தேகங்களையும் மாணவர்கள கேட்க, அதற்கு உடனே பதிலை விளக்கமாக ஆசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர். மேலும், மாணவர்களின் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தையும், அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யவும் பல்வேறு வகைகளில் வருவாய் ஈட்டவும் ஏற்பாடு செய்து வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் சாம்சன் இளங்கோவன் கூறியதாவது:  ரெங்காபுரம் இருளர் காலனியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி வசதி அளிக்க வேண்டும். இதற்காக பல்வேறு ஆதாரங்களை ஏற்படுத்தி கொடுக்கவே தத்தெடுத்துள்ளோம். இங்கிருந்து சதுரங்கபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். 

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 பேர் உயர் கல்விக்கு சென்றுள்ள நிலையில், அதற்கான உதவியும் செய்து வருகிறோம். இதேபோல் பல்வேறு உதவிகளை பழங்குடியினர் மாணவர்களுக்கு செய்வதற்கு தயாராகவே உள்ளோம். தற்போதைய நிலையில் கல்வி கிடைத்தால் போதும், அதையடுத்து அவர்களது தலைமுறையை அவர்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வாழ்வாதாரம் உயரும். அதேபோல், பெற்றோர்களுக்கும் எலைட் ரோட்டரி சங்கம் மூலம் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறோம். இதேபோல் ஒவ்வொரு பழங்குடி கிராமங்களையும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தத்தெடுத்தால் கல்வி வசதி பெறாத மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com