அவசர வழக்குகள் முறையிடும் முறையில் மாற்றம் ஏன்?:  உச்சநீதிமன்றம் விளக்கம்

அவசர வழக்குகள் முறையிடும் முறையில் மாற்றம் ஏன்?: உச்சநீதிமன்றம் விளக்கம்

மூத்த வழக்குரைஞா்களுக்கு வழக்குகளை அவசரமாக விசாரிக்க முறையிடுவதில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என்பதற்காக, வழக்குகள் முறையிடும் முறையில் புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

புது தில்லி: மூத்த வழக்குரைஞா்களுக்கு வழக்குகளை அவசரமாக விசாரிக்க முறையிடுவதில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என்பதற்காக, வழக்குகள் முறையிடும் முறையில் புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

வழக்குகளை விரைந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அமா்வு முன் வழக்குரைஞா்கள் முறையிடுவது உச்சநீதிமன்றத்தில் நீண்ட கால வழக்கமாக இருந்தது.

இந்த முறையை மாற்றி பதிவாளரிடம் முறையிடும் புதிய நடைமுறையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கொண்டு வந்தாா்.

இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஊழல் தொடா்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி பதிவாளா் முன் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை முறையிட்டாா்.

அப்போது, தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ‘அவசர வழக்குகளாக முறையிடுவதில் மூத்த வழக்குரைஞா்களுக்கு முன்னுரிமை அளித்துவிட்டு, இளம் வழக்குரைஞா்களுக்கான வாய்ப்புகளை தட்டிப் பறிக்கக் கூடாது என்பதற்காக இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டது. பதிவாளா் முன் முறையிட்டும் நிராகரிக்கப்பட்டு விட்டால், சம்பந்தப்பட்ட அமா்வு முன் முறையிடுவதற்கு உரிமை உள்ளது’ என்றாா்.

இதற்கு பிரசாந்த் பூஷண், ‘அவசர வழக்காக அனுமதிக்கப்பட்ட பிறகும், விசாரணை பட்டியலில் வழக்கு இடம்பெறுவதே இல்லை’ என்றாா். இதே விவகாரத்தை வழக்குரைஞா் எம்எல் சா்மாவும் எழுப்பினாா்.

‘அந்த குறிப்பிட்ட வழக்கை கொண்டு வந்தால், அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்’என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.பி. ரமணா உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com