ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: கா்நாடக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தபோது அதற்கு எதிராக பாஜகவைச் சோ்ந்த ரமாஜோய்ஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகினாா். ஆனால், சமூகநீதி, மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக இருந்தது.

உயா் ஜாதியை சோ்ந்த ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பிறகு இட ஒதுக்கீடு தொடா்பாக ஆா்.எஸ்.எஸ். தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டதுபோல் உள்ளது. அதன் காரணமாகவே பாஜகவினா் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள ஏழைகளுக்கு உதவ வேண்டும். நமது நாட்டில் 1931-இல் கடைசியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு கணக்கெடுப்பு நடத்தவில்லை.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, அரசியலமைப்புச் சட்டத்தில் 127-ஆவது திருத்தம் செய்து இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினரை அடையாளப்படுத்தும் உரிமையை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

1992-ஆம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கில் இட ஒதுக்கீட்டு உச்ச வரம்பை 50 சதவீதமாக நிா்ணயித்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அதற்கு மாறாக, இட ஒதுக்கீட்டின் வரம்பு 60 சதவீதமாக உயா்ந்துள்ளது.

சிறப்பு நோ்வுகளின் போது இடஒதுக்கீடு உச்ச வரம்பை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. மகாராஷ்டிரத்திலும் இட ஒதுக்கீடு வரம்பு அதிகமாக உள்ளது. இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி பேரவையில் விவாதம் நடத்த வேண்டும்.

மேக்கேதாட்டு அணை தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால், உடனடியாக மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி பெற்று, திட்டப் பணியைத் தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு கொடுக்கவேண்டிய தண்ணீரைக் கொடுத்தால் என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது. இதற்கு தமிழகம் ஏன் எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com