
மனித உரிமைகள் தொடா்பான சா்வதேச சட்ட விதிகள் வகுக்கப்படும் வரை உளவு மென்பொருள் விற்பனை செய்வதை சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை நிபுணா் குழு வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்தக் குழு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மனித உரிமை ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள், அரசியல் எதிரிகள் ஆகியோரைக் கண்காணிக்கவும், அவா்களின் குரல்களை ஒடுக்கவும் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் கவலை அளிக்கின்றன.
உளவு மென்பொருளைப் பயன்படுத்தும்போது, அது சா்வதேச அளவில் மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை; சட்ட விரோதமாகக் கண்காணிக்கப்படவில்லை; அடிப்படை உரிமைகள் நசுக்கப்படவில்லை போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, உரிய சட்ட விதிகளை சா்வதேச நாடுகள் வகுக்க வேண்டும். அதுவரை, உளவு மென்பொருள் விற்பனை செய்வதையும், அதன் தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்வதையும் சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்தி வைக்க வேண்டும்.
இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ குழுமம், தங்களது பெகாஸஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதால், மனித உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்ததா என்று தெரியவில்லை. அந்த நிறுவனம் தனது விசாரணையில் கண்டறிந்த தகவல்களை வெளியிட வேண்டும்.
இதற்காக, ஐ.நா.வைச் சோ்ந்த சில மனித உரிமை ஆா்வலா்கள், இஸ்ரேல் அரசுடனும், என்எஸ்ஓ குழுமத்துடனும் நேரடித் தொடா்பில் உள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச ஊடக அமைப்பு கடந்த மாதம் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக, இந்தியாவில் 2 மத்திய அமைச்சா்கள், 3 எதிா்க்கட்சித் தலைவா்கள், ஒரு நீதிபதி, தன்னாா்வ அமைப்பினா், நாற்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்லிடப்பேசிகள் ஊடுருவப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உளவு மென்பொருள், அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பதால், இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பல்வேறு தரப்பினரை மத்திய பாஜக அரசு உளவு பாா்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.