
குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை மத்திய அமைச்சா்கள் பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோா் அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
முன்னதாக, நாடாளுமன்றக் கூட்டத் தொடா் எதிா்க்கட்சியினரின் தொடா் அமளி காரணமாக, இருநாள்கள் முன்னதாக புதன்கிழமையே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மாநிலங்களவையில் பேசிய வெங்கையா நாயுடு, உணா்ச்சிவசப்பட்டு கண்ணீா் சிந்தினாா். எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளியால், இரவில் உறக்கமின்றி தவித்ததாகவும், ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்துக்குஅவமதிப்பு நோ்ந்தது வேதனை அளிக்கிறது என்றும் கூறினாா்.
இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை பாஜக தலைவரும், வா்த்தகம்,தொழில் துறை அமைச்சருமான பியூஷ் கோயல், சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி ஆகியோா் வெங்கையா நாயுடுவை சந்தித்துப் பேசினா். அப்போது, மாநிலங்களவை நிகழ்வுகள் குறித்து அவா்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.