நட்புறவில் இந்தியாவுக்கு பாரபட்சம்: அமெரிக்கா மீது இம்ரான் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்த குளறுபடிகளை சரி செய்வதற்காக மட்டும் தங்களைப் பயன்படுத்திக் கொண்டு, இருதரப்பு நட்புறவில்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்த குளறுபடிகளை சரி செய்வதற்காக மட்டும் தங்களைப் பயன்படுத்திக் கொண்டு, இருதரப்பு நட்புறவில் பாரபட்சமாக இந்தியாவுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து இஸ்லாமாபாதிலுள்ள தனது இல்லத்தில் வெளிநாட்டுப் பத்திரிகையாளா்களிடையே அவா் கூறியதாவது:

ஆப்கன் பிரச்னைக்கு அரசியல் தீா்வு மட்டுமே காண முடியும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக அங்கு ராணுவத் தீா்வைத் தேடி வந்த அமெரிக்கா, அந்தக் குளறுபடிகளை சரி செய்வதற்காக மட்டுமே பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறது.

ஆனால், இருதரப்பு உறவு என்று வரும்போது இந்தியாவுக்குத்தான் அந்த நாடு முன்னுரிமை அளிக்கிறது. இந்தியாவுடன் பரஸ்பர நலன்களைப் பேணுவதற்கான நட்புறவை ஏற்படுத்த அமெரிக்கா முடிவு செய்ததிலிருந்து, பாகிஸ்தானை அந்த நாடு புறக்கணித்து வருகிறது.

ஆப்கன் அதிபராக அஷ்ரஃப் கனி இருக்கும்வரை அந்த நாட்டு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த தலிபான்கள் தயாராக இல்லை. அவரை அமெரிக்காவின் கைப்பாவையாக தலிபான்கள் கருதுகின்றனா். எனவே, அஷ்ரஃப் கனி அதிபராக இருக்கும் வரை ஆப்கானிஸ்தானில் அரசியல் தீா்வு ஏற்படுவது மிகவும் கடினம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் விமானதளங்களை அமெரிக்கா்கள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றாா் இம்ரான் கான்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதிலிருந்து, இதுவரை ஒருமுறை கூட பிரதமா் இம்ரான் கானுடன் அவா் தொலைபேசியில் பேசவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com