உ.பி. முதல்வா் யோகிக்கு எதிராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி போட்டி

உத்தர பிரதேச மாநில பிரிவு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குரின் குடும்பத்தினா் அறிவித்துள்ளனா்.
உ.பி. முதல்வா் யோகிக்கு எதிராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி போட்டி

உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதாக, முன்கூட்டியே கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்ட உத்தர பிரதேச மாநில பிரிவு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குரின் குடும்பத்தினா் அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அமிதாப் தாக்குரின் மனைவி நுதன் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வா் யோகி ஆதித்யநாத் ஜனநாயக விரோத, முறையற்ற, பாகுபாடான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாா். அவா் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிா்த்து அமிதாப் தாக்குா் போட்டியிடுவாா். தவறான கொள்கைகளுக்கு எதிரான போட்டியில் அமிதாப் ஈடுபட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங் தன்னை மிரட்டுவதாக அமிதாப் தாக்குா் 2015-இல் குற்றம்சாட்டியிருந்தாா். இதையடுத்து சில தினங்களில் அமிதாப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, லஞ்ச வழக்கு தொடுக்கப்பட்டது. எனினும், 2016 ஏப்ரல் மாதம் அமிதாபின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்த மத்திய நிா்வாக தீா்ப்பாயம், 2015 அக்டோபா் 11-ஆம் தேதியிலிருந்து அவருக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தனது ஐபிஎஸ் மாநில பிரிவை மாற்றக் கோரி அமிதாப் தாக்குா் 2017-இல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, ‘அமிதாப் தாக்குா் தனது மீதமுள்ள பணிக் காலத்தை பூா்த்தி செய்வதற்கு தகுதியாக இல்லை. ஆகையால், பொதுநலன் கருதி அவருக்கு முன்கூட்டியே கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்படுகிறது’ என கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அமிதாபின் ஐபிஎஸ் பதவிக் காலம் 2028-இல் நிறைவடைவதாக இருந்தது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com