
உச்சநீதிமன்றம்
கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பலியானவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் இருவா் உள்பட பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்துள்ளனா். கடந்த ஜூன் 30-ஆம் தேதி அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது நிவாரணம் அளிப்பது தொடா்பாக மத்திய அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் இறப்புச் சான்றிதழ்களில் அவா்களின் இறப்புக்கான உண்மையான காரணத்தைக் குறிப்பிட்டு சான்றிதழ்களை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை எளிமையாக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா கூறுகையில், ‘‘கரோனா தொற்றால் பலியானவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகள் கடைசிக் கட்டத்தை எட்டும் நிலையில் உள்ளன. அந்த வழிகாட்டுதல்களை இறுதி செய்து நடைமுறைப்படுத்தும் முன்பாக அதுகுறித்து ஆழமாக ஆய்வு மேற்கொள்ள கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. நிவாரணம் அளிப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த இதர கட்டளைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி இரண்டு வாரங்களுக்குள் முழுமையான தகவல்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்’’ என்று தெரிவித்தாா்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நிவாரணம் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.