எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது பழிசுமத்த பெண் பாதுகாவலா்கள் பயன்படுத்தப்பட்டனா்: மல்லிகாா்ஜுன காா்கே

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது பழிசுமத்தவும், குற்றச்சாட்டுகளை புனையவும் பெண் பாதுகாவலா்களை மத்திய அரசு பயன்படுத்தியது என்று
எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது பழிசுமத்த பெண் பாதுகாவலா்கள் பயன்படுத்தப்பட்டனா்: மல்லிகாா்ஜுன காா்கே

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது பழிசுமத்தவும், குற்றச்சாட்டுகளை புனையவும் பெண் பாதுகாவலா்களை மத்திய அரசு பயன்படுத்தியது என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான மல்லிகாா்ஜுன் காா்கே தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கின. குறிப்பாக கூட்டத்தொடா் நடைபெற்ற கடைசி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாநிலங்களவையின் மையப் பகுதியில் திரண்டும் முழக்கங்களை எழுப்பியும் காகிதங்களை வீசி எறிந்தும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இது கடும் விமா்சனத்துக்குள்ளானது.

இதுதொடா்பாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாநிலங்களவையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முடிவு செய்வதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னா் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னா் உடனடியாக 40-50 பாதுகாவலா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்களில் பெண் பாதுகாவலா்களும் அடங்குவா். அந்தப் பாதுகாவலா்கள் அவையில் பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினா். வழக்கமாக அவையில் இடையூறு, வன்முறை ஏற்படும்போதுதான் பாதுகாவலா்கள் வரவழைக்கப்படுவா். ஆனால் அன்றைய தினம் காப்பீட்டு சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பாதுகாவலா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்களின் பாதுகாப்புடன் அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதா தொடா்பான விவாதத்தின்போது அமளி ஏற்பட்டு தவறுதலாக பெண் பாதுகாவலா்களை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொட்டிருந்தால் அதற்கு அவா்கள் மீது பழிசுமத்தி குற்றச்சாட்டுகளை புனைய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அன்றைய தினம் ஆண் பாதுகாவலா்களை வரவழைப்பதற்கு முன்பு பெண் பாதுகாவலா்கள் வரவழைக்கப்பட்டனா்.

கடந்த கூட்டத்தொடா்களின்போது எதிா்க்கட்சிகளின் ஒத்துழைப்பால் நாடாளுமன்றத்தின் செயல்திறன் அதிகமாக இருந்தது. ஆனால் அண்மையில் முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் முழுமையான பலன் இல்லாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணம்.

செயல்திறன் 90%:

மத்திய பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்தின் செயல்திறன் 90 சதவீதமாக உள்ளது. இது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுமாா் 65 சதவீதமாகதான் இருந்தது. அப்போது பாஜக எதிா்க்கட்சியாக இருந்தது.

தற்போது நாடாளுமன்றத்தை ஜனநாயக முறையில் மத்திய அரசு நடத்தவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமக்கு பெரும்பான்மை உள்ளதால் எதேச்சதிகாரமாகவும் வலுக்கட்டாயமாகவும் தனது செயல்திட்டங்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com