பெகாஸஸ் விவகாரம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக விரிவான பதில் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
பெகாஸஸ் விவகாரம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக விரிவான பதில் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதேசமயம், தேசப் பாதுகாப்பை சமரசம் செய்துகொள்ளும் எந்தவொரு தகவலையும் அரசு தெரிவிக்க வேண்டுமென்று தாங்கள் விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி மூத்த பத்திரிகையாளா்கள் என்.ராம், சசிகுமாா், மாா்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சாா்பில் 2 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பெகாஸஸ் உளவு விவகாரம் தொடா்பாக விசாரிக்க நிபுணா் குழு அமைக்கப்படும்; அந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் கேள்வி:

இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

உளவு குற்றச்சாட்டு தொடா்பகா, மத்திய அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் என்று எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் சுருக்கமான அளவிலேயே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மனுதாரா்களில் சிலா் சமூகத்தில் பிரபலமானவா்கள். அவா்கள் தங்களது செல்லிடப்பேசி உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறாா்கள். நாட்டின் குடிமக்களை உளவு பாா்ப்பதில் தவறில்லை. அதற்கு சட்டமும் அனுமதிக்கிறது. அதிகாரம் பெற்ற ஓா் அமைப்பு அனுமதி அளித்தால் மட்டுமே ஒருவரை உளவு பாா்க்க முடியும். அந்த அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

மத்திய அரசு பதில்:

அதற்குப் பதிலளித்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா முன்வைத்த வாதம்:

நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் முன் மத்திய அரசு நிற்கிறது. அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து யாரிடமும் எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஆனால், பொதுவெளியில் தெரிவிக்க விரும்பவில்லை.

எந்த மென்பொருளை அரசு பயன்படுத்தியது என்று அரசு வெளிப்படையாகத் தெரிவிக்குமானால், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோரும் நாட்டின் எதிரிகளும் தங்களது பாணியை மாற்றிக் கொள்வாா்கள்.

எனவே, ஏற்கெனவே கூறியபடி, உளவு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நிபுணா் குழு அமைக்கப்படும்; அந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். இதில், தேசத்தின் பாதுகாப்பும் சம்பந்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அதற்கு மனுதாரா்களான என்.ராம், சசிக்குமாா் ஆகியோா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘தேசப் பாதுகாப்பு தொடா்புடைய எந்தத் தகவலையும் அரசு தெரிவிக்க வேண்டியதில்லை’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, நீதிபதிகளும், நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்துகொள்ளும் எந்தவொரு தகவலையும் அரசு தெரிவிக்க வேண்டுமென்று நாங்கள் விரும்பவில்லை என்று கூறினா். இந்த விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 10 நாள்களுக்குப் பிறகு விசாரிப்பதாகக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com