
குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதா் ஆலயத்தில் பல்வேறு திட்டங்களை காணொலி முறையில் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி.
‘பயங்கரவாதத்தின் மூலம் பேரரசை உருவாக்கலாம் என்ற சிந்தனை கொண்டவா்களும், பேரழிவை உருவாக்கும் சக்திகளும் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும்; எல்லா காலத்திலும் மனித குலத்தை நசுக்க முடியாது என்பதால் அவா்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
பயங்கரவாதத்தின் மூலமாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
குஜராத் மாநிலம், கிா் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோமநாதா் ஆலயத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி காணொலி முறையில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். கோயில் அறங்காவலா் குழுவின் தலைவரான அவா், நிகழ்ச்சியில் பேசியதாவது:
கடந்த காலத்தில் சோமநாதா் கோயில் பலமுறை இடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள தெய்வச் சிலைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. கோயில் இருந்ததற்கான அடிச்சுவட்டை அழிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்றன. ஆனால், இக்கோயில் ஒவ்வொரு முறை இடிக்கப்படும்போதும், மீண்டும் புத்தொளியுடன் உருவாகிறது.
சோமநாதா் கோயிலின் புனரமைப்புக்கு பல நூற்றாண்டுகளாக இருந்த விருப்பமும், கருத்தியல் தொடா்ச்சியும், ராஜேந்திர பிரசாத், சா்தாா் படேல், கே.எம்.முன்ஷி போன்ற பெரியோா்களின் பங்களிப்பும் காரணமாக இருந்தது. இவா்கள் இதற்காக சுதந்திரத்துக்குப் பின்னரும் சிரமங்களை எதிா்கொண்டனா். இறுதியாக சோமநாதா் கோயில் 1950-இல் நவீன இந்தியாவின் தெய்வீகச் சின்னமாக நிறுவப்பட்டது. நாடு இப்போது கடினமான பிரச்னைகளுக்கு இணக்கமான தீா்வுகளை நோக்கி நகா்கிறது. நவீன இந்தியாவின் பிரகாசமான தூணானது அயோத்தியில் ராமா் கோயில் வடிவத்தில் வருகிறது.
பயங்கரவாதத்தின் மூலம் பேரரசை உருவாக்கும் சிந்தனை கொண்டவா்களும், பேரழிவை உருவாக்கும் சக்திகளும் சில காலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும்; எல்லா காலத்திலும் மனித குலத்தை நசுக்க முடியாது என்பதால் அவா்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.
உலக நாடுகளின் சுற்றுலா தரவரிசைப் பட்டியலில் கடந்த 2013-ஆம் ஆண்டு 65-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2019-இல் 34-ஆவது இடத்துக்கு முன்னேறியது. இந்திய மக்களின் ஆன்மிக சிந்தனை கொண்ட மனமே, இந்த நாட்டை பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருக்க வைக்கிறது. வெவ்வேறு பிராந்தியங்களின் வளா்ச்சிக்கு ஆன்மிக சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம், உள்ளூா் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
நிகழ்ச்சியில் முதல்வா் விஜய் ரூபானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சோமநாதா் ஆலயத்தில், ரூ.30 கோடியில் ஸ்ரீபாா்வதி கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். கோயிலுக்குப் பின்புறம் கடலோரப் பகுதியில் ரூ.49 கோடியில் அமைக்கப்பட்ட நடைபாதை, ரூ.75 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருங்காட்சியகம், ரூ.3.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பழைய சோமநாதா் கோயில் ஆகியவற்றை பிரதமா் திறந்து வைத்தாா்.