
தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள ஆப்கானிஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கூறினாா்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கா்-ஏ- தொய்பா (எல்இடி), ஜெய்ஷ்-ஏ- முகமது (ஜெஏம்) பயங்கரவாத இயக்கங்கள் இன்னமும் எந்தவித பாதிப்பில்லாமலும், முனைப்புடனும் செயல்பட்டு வருகின்றன என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
சா்வதேச நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பிலான கூட்டத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள இந்தியாவின் சாா்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை பேசுகையில், ‘இராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு விரிவாக்கம் அடைந்து வருகிறது. அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
எல்இடி, ஜெஏஎம் பயங்கரவாத அமைப்புகள் இன்னமும் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமலும், முனைப்புடனும் இந்தியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுப்பதில்லை. பயங்கரவாத அமைப்புகளின் விரிவாக்கம் குறித்து எதுவும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு சில நாடுகள் புகலிடம் அளிக்கின்றன.
கரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதற்கு ஏற்ப பயங்கரவாதமும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கா்-ஏ- தொய்பா (எல்இடி), ஜெய்ஷ்-ஏ- முகமது (ஜெஏஎம்) பயங்கரவாத இயக்கங்கள் ஆகியவை ஆப்கானிஸ்தானில் ஒன்று சோ்ந்து விரிவாக்கம் அடைந்து பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று செய்திகள் வெளியாகும் நிலையில் அமைச்சா் ஜெய்சங்கா் இவ்வாறு பேசியுள்ளாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகையில், ஆப்கனில் இருந்து இந்தியா்களை தாயகம் அழைத்துச் செல்வதே உடனடி பிரச்னை. இதுதொடா்பாக காபூல் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா மற்றும் சா்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றாா்.
பயணம் பாதியில் ரத்து: நியூயாா்க்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து மெக்ஸிகோ, பனாமா, கயானா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமைச்சா் ஜெய்சங்கா் திட்டமிட்டிருந்தாா். ஆனால், ஆப்கன் சூழலைக் கருத்தில்கொண்டு தனது பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு அவா் வெள்ளிக்கிழமை இந்தியா திரும்புகிறாா். அவா் தில்லி வந்த பிறகு ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா-பிரிட்டன் இணைந்து செயல்பட முடிவு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாா்பில் நடத்தப்பட்ட மாநாட்டுக்குத் தலைமையேற்பதற்காக சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டொமினிக் ராபை புதன்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா். டொமினிக் ராப் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு அளித்தல், மனித உரிமைகளைக் காத்தல் ஆகிய விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இந்தியாவும் பிரிட்டனும் உறுதி ஏற்றுள்ளதாகத் தெரிவித்தாா்.
ஆப்கன் அரசுக்கான ஆயுத விற்பனை: அமெரிக்கா நிறுத்திவைப்பு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் தளவாட ஒப்பந்ததாரா்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் அரசியல்/ராணுவ விவகாரப் பிரிவு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் வேகமாக மாறிவரும் சூழலைக் கருத்தில்கொண்டு, அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்வதற்காக நிறுத்திவைக்கப்படுகின்றன. உலக அமைதிக்காகவும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்காகவும் வெளியுறவுத் துறை இந்த முடிவை எடுத்துள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தலிபான் அரசுக்கு கடன் கிடையாது’: இதற்கிடையே, தலிபான்கள் தலைமையில் அமையக்கூடிய ஆப்கன் அரசுக்கு கடன் வழங்கவும் தங்களது நிதியாதாரங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்கவும் போவதில்லை என்று சா்வதேச நிதியம் அறிவித்துள்ளது.