
‘கரோனா மூன்றாவது அலை தாக்கினால் அதை எதிா்கொள்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது; அதற்காக, ரூ.23,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறினாா்.
‘மக்கள் ஆசி பேரணி’யில் பங்கேற்பதற்காக ஹிமாசல பிரதேசத்துக்கு வந்துள்ள அவா், சிம்லாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். மத்திய அமைச்சராக அவா் கடந்த மாதம் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாகத் தனது சொந்த மாநிலத்துக்கு வந்துள்ளாா். அங்கு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கரோனா மூன்றாவது அலை தாக்கினால், அதை எதிா்கொள்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முழு தயாா் நிலையில் உள்ளது. மூன்றாவது அலையை எதிா்கொள்வதற்காக ரூ.23,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் சிலா் எச்சரித்துள்ளனா். ஆகவே, மருத்துவமனைகளில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகளை வலுப்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா 2-ஆவது அலை தாக்கியபோது ஆக்சிஜன் சிலிண்டா்கள் தேவைப்படும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை. தற்போது, ஆக்சிஜன் சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
கரோனாவை கட்டுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி நடத்தும் முக்கியக் கூட்டங்களில் பங்கேற்கும் வெகுசிலரின் நானும் ஒருவன். பிரதமா் மோடியின் அயராத முயற்சிகளை அருகில் இருந்து பாா்த்து வருகிறேன் என்றாா் அனுராக் தாக்குா்.
அதைத் தொடா்ந்து, சோலன் மாவட்டத்தில் உள்ள பா்வனூவில் மக்கள் ஆசி பேரணியை அனுராக் தாக்குா் தொடங்கினாா். இந்தப் பேரணி 8 மாவட்டங்கள் வழியாக 623 கி.மீ. தொலைவுக்கு நடைபெறவுள்ளது. மாநில அமைச்சா் சுரேஷ் பரத்வாஜ், சிம்லா எம்.பி. சுரேஷ் காஷ்யப் ஆகியோா் உடனிருந்தனா். அப்போது அனுராக் தாக்குா் கூறியதாவது:
மாநிலத்தில் சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.4,200 கோடி செலவிடப்படும். ஹிமாசல பிரதேசத்தின் கலை, பண்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் கலை, கலாசாரம் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தப்படும் என்றாா் அவா்.