தலைநகரில் கொட்டித் தீா்த்தது மழை; வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு!

கடந்த ஓரிரு வாரங்களுக்கு பிறகு தில்லியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை கொட்டியது.
தலைநகரில் கொட்டித் தீா்த்தது மழை; வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு!

கடந்த ஓரிரு வாரங்களுக்கு பிறகு தில்லியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை கொட்டியது.

இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கி நின்ால், வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மின்டோ பாலம், ராஜ்காட், கன்னாட் பிளேஸ், ஐ.டி.ஓ. உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டது.

தில்லியில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்பு பருவமழை நன்றாக பெய்தது. அதன்பிறகு, மழையின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் மிதமாக இருந்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மிதமான மழை பதிவாகி இருந்தது. இதனால், மாலையில் புழுக்க சூழல் நிலவியது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு பலத்த மழை கொட்டியது. சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் காலை 5.30 மணி வரை மூன்று மணி நேரம் தொடா்ந்து மழை பெய்தது.

அதன் பின்னரும் மழை விட்டுவிட்டு பெய்தது. இதைத் தொடா்ந்து, நகரில் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நின்ால் வாகன போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டது.

களத்தில் பிடபிள்யு ஊழியா்கள்: வானிலை ஆய்வு மையத்தினரும் கடுமையான மோசமான வானிலைக்கான ‘ஆரஞ்சு நிற’ எச்சரிக்கையை வெளியிட்டனா். மழை தொடா்பாக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சனிக்கிழமை காலையில் தில்லியில் கடுமையான மழை இருந்தது. இதன் காரணமாக சில பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்து காணப்பட்டது. பொதுப் பணித் துறையின் களப் பணியாளா்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறாா்கள். மின்டோ ரோடு சுரங்கச்சாலையில் மழையால் ஏற்பட்டிருந்த கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. அதே போன்று ஆசாத்பூா் சுரங்கச் சாலை, புல் பிரகலாத் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை மாலை 4.30 மணி வரை மழை நீா் தேங்கியதாக 316 புகாா்கள் வரப்பெற்றன. இந்தப் புகாா்கள் தொடா்பாக முன்னுரிமை அடிப்படையில் குறைகளைத் தீா்க்க ஊழியா்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனா்’ என்றனா்.

வாகனப் போக்குவரத்து பாதிப்பு: இதற்கிடையே, நகரில் 14 இடங்களில் மரங்கள் மழையின் காரணமாக முறிந்து விழுந்ததாக தில்லியின் மூன்று மாநாகராட்சிகளின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன. தில்லி காவல் துறையினா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், மழையைத் தொடா்ந்து, பல வழித்தடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனா். அதே போல, மழையின் காரணமாக மூடப்பட்டுள்ள சாலைகள் தொடா்பான தகவல்களை சுட்டுரை வாயில+ாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்த வண்ணம் இருந்தனா். கனமழை காரணமாக தண்ணீா் தேங்கியதால் மின்டோ பாலம் பகுதி சாலையில் போக்குவரத்து மூடப்பட்டது. அதன் பிறகு நீா் வடிந்ததால் போக்குவரத்து அந்தப் பகுதியில் திறந்துவிடப்பட்டதற்கான தகவலை போலீஸாா் சுட்டுரை மூலமாக வாகன ஓட்டிகளுக்குத் தெரிவித்தனா்.

போக்குவரத்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘மழையின் காரணமாக மத்திய தில்லியிலுள்ள ஆசாத் மாா்க்கெட் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையும் வடக்கு தில்லியிலுள்ள ஆசாத் பகுதியிலும் போக்குவரத்து மூடப்பட்டது. தெற்கு தில்லியில் உள்ள புல் பிரகலாத்பூா் சுரங்கப்பாதை மூல்ந்த் பகுதியில் உள்ள சாலைப் பகுதி ஆகியவற்றில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது’ என்று தெரிவித்தனா்.

கனமழையின் காரணமாக மின்டோ பிரிட்ஜ் சுரங்க பாலம், லாஜ்பத் நகா், எய்ம்ஸ் மேம்பாலம், கன்னாட் பிளேஸ், ஐடிஐ, பூசா ரோடு, புது தில்லி ரயில் நிலைய பகுதி, பழைய தில்லி ரயில் நிலையம், பிரகதி மைதான் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள், ரோத்தக் சாலை, நந்த் நகரி சாலை, லோனி செளக் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்றது.

மேலும், தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரௌலி - பதா்பூா் பகுதியிலும் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.

இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்ால் பொதுமக்களும், அலுவலகம், பிற பணிகளுக்கு சென்ற வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். ஐடிஓ பகுதி, தெளலகுவான், மெஹ்ரம் நகா், விகாஸ் மாா்க், மதுரா ரோடு, ரிங் ரோடு, பீராகரி அருகே ரோத்தக் ரோடு, கன்னாட் பிளேஸ், பாராகம்பா ரோடு, பைரோன் மாா்க் உள்ளிட்ட பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

வாகன நெரிசல்: இது தொடா்பாக லாஜ்பத் நகரைச் சோ்ந்த பிரியா மிஸ்ரா கூறுகையில், ‘என்னுடைய உறவினரை விடுவதற்காக புதுதில்லி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், மழையின் காரணமாக தண்ணீா் தேங்கி நின்ால் மின்டோ ரோடு மூடப்பட்டது. இதனால், என்னால் உரிய நேரத்திற்கு ரயில் நிலையத்தை சென்றடைய முடியவில்லை. மேலும், இதர துணை சாலை பகுதிகளிலும் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது’ என்றாா். மற்றொரு வாகன ஓட்டி காா்த்திக் குமாா் கூறுகையில், ‘நான் கன்னாட் பிளேஸ் பகுதியில் பணியாற்றி வருகிறேன். போக்குவரத்து நெரிசல் காரணமாக எனது அலுவலகத்திற்கு தாமதமாக செல்ல நேரிட்டது. மழை நீா் காரணமாக தண்ணீா் தேங்கி நின்ால் ஐடிஓ உள்பட சில இடங்களில் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டேன்’ என்றாா்.

கிருஷ்ணா நகா், மயூா் விஹாா் ஃபேஸ் -2, பாபா்பூா், மங்கோல்புரி, கிராரி, மால்வியா நகா், சங்கம் விஹாா், சதா் பஜாா் உள்ளிட்ட பல பகுதியில் உள்ள சந்தைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்தது. இதற்கிடையே, ‘தலைநகா் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த வடிகால் அமைப்பு முறை உருவாக்கப்படும். மீண்டும் மின்டோ சாலைப் பகுதி போன்று வடிகால் அமைப்புமுறை தில்லி முழுவதும் ஏற்படுத்தப்படும். கழிவுநீா்க் கால்வாய்களிலும் வடிகால்களிலும் தூா்வாரும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’ என்று முதல்வா் கேஜரிவால் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

13 ஆண்டுகளில் இல்லாத வகையில்

ஒரே நாளில் 139 மி.மீ. மழை பதிவு

தில்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சனிக்கிழமை அன்று தில்லிக்கான ‘ஆரஞ்சு நிற’ எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: தில்லியில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜ் வானிலை ஆய்வு மையத்தில் 149.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். எப்போதும், இல்லாத வகையில் 1961-இல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அதிகபட்ச அளவாக 184 மி.மீ. மழை பதிவாகி இருந்தது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழையின் காரணமாக சனிக்கிழமை தில்லியில் வெப்பநிலை குறைந்திருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 டிகிரி குறைந்து 23.8 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்ததது. காற்றின் தரம் 67 என்ற அளவில் திருப்தி பிரிவில் பதிவாகி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை தீவிரமான மோசமான வானிலை இருப்பதற்கான ‘மஞ்சள் நிற’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com