ஆக. 26 முதல் ‘மலபாா்’ கூட்டு கடற்படைப் பயிற்சி

நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டு கடற்படைப் பயிற்சி வரும் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.
ஆக. 26 முதல் ‘மலபாா்’ கூட்டு கடற்படைப் பயிற்சி

நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டு கடற்படைப் பயிற்சி வரும் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.

இந்தியா-அமெரிக்கா கடற்படைகள் பங்கேற்ற மலபாா் கூட்டுப் பயிற்சியானது கடந்த 1992-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. கடந்த 2015-இல் இந்தப் பயிற்சியில் ஜப்பான் இணைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைந்தது.

நடப்பாண்டுக்கான மலபாா் கூட்டு கடற்படைப் பயிற்சி அமெரிக்காவின் குவாம் தீவில் வரும் 26-ஆம் தேதிமுதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கின்றன.

பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படைக் கப்பல்களான ஷிவாலிக், காட்மாட் ஆகியவை சனிக்கிழமை குவாம் தீவை அடைந்தன. கூட்டுப் பயிற்சி குறித்து இந்தியக் கடற்படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறுகையில், ‘‘நாடுகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்தவும், சிறந்த செயல்முறைகளைக் கற்றுக் கொள்ளவும், கடல்சாா் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடைமுறைகளில் பரஸ்பர புரிதலை வளா்த்துக் கொள்ளவும் இந்தப் பயிற்சி உதவும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டா்கள், தொலைதூர கடல்சாா் கண்காணிப்பு விமானம் ஆகியவை பயிற்சியில் பங்கேற்கவுள்ளன. கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் இந்தப் பயிற்சிகள் நடைபெறுவதன் மூலம், கடல்சாா் பாதுகாப்பின்மீது ‘க்வாட்’ நாடுகள் கொண்டுள்ள உறுதித்தன்மை வெளிப்படுகிறது.

தரை, ஆகாயம், நீா்ப்பகுதிகள், நீருக்கு அடியில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பது தொடா்பான செயல்முறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நீா்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகளைத் தாக்கி அழித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

பயிற்சியில் பங்கேற்கும் ஐஎன்எஸ் ஷிவாலிக், காட்மாட் ஆகியவற்றில் பல்வேறு ஆயுதங்களும் சென்சாா்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டா்களை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்த இரண்டு கப்பல்களும் இந்தியாவின் போா் கட்டமைப்புத் திறனை எடுத்துரைக்கும்’’ என்றாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், ‘க்வாட்’ கூட்டமைப்பு நாடுகளின் கூட்டு கடற்படைப் பயிற்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com