'எங்களுக்கு உணவு, கல்வி, பாதுகாப்பு வேண்டும்’: தில்லியில் ஆப்கன் அகதிகள் போராட்டம்

தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் நாட்டினர்
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் நாட்டினர்

தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து 20ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, முந்தைய ஆட்சி காலத்தில் தலிபான்கள் கடைபிடித்த பிற்போக்குத்தன்மையும், பெண்கள் மீதான அடக்குமுறையும் மீண்டும் உருவெடுக்கும் சூழல் ஏற்படும் என உலகம் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று தில்லியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன்பு "எங்களுக்கு எதிர்காலம் வேண்டும்", “பாதுகாப்பு வேண்டும்” போன்ற பதாகைகளுடன் ஆப்கானியர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவின் ஆப்கானிஸ்தான் சமூகத்தினர் குழுத் தலைவர் அகமது ஜியா கானிகூறியது:

நாங்கள் மூன்று கோரிக்கையை வலியுறுத்தி இங்கு கூடியுள்ளோம். இந்தியாவில் நீண்ட கால விசா விண்ணப்பிக்க அகதிகள் அட்டை, மறுவாழ்வு தேடி பிற நாடுகளுக்கு செல்ல ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையரகத்தின் ஆதரவு கடிதம், இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். மேலும் வேலை, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆப்கனிலிருந்து வருபவர்களை இந்தியா மீட்டு வருகின்றது. ஆனால், அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானதை செய்ய வேண்டும். நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கின்றோம். ஆனால், அடிப்படை ஆவணமான அகதிகள் அட்டை கூட இல்லை.

இந்தியாவில் வாழும் 21,000 ஆப்கன் அகதிகளில், 13,000 பேரிடம் ஆவணங்கள் இல்லை. வேலை, கல்வி, உணவு மற்றும் பாதுகாப்பிற்காக போராடி வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும், ஆப்கன் நாட்டை சேர்ந்த ஐரிஃபா என்ற 10 வயது சிறுவன் பேசுகையில், “நாங்கள் 2016இல் இந்தியா வந்தோம். தற்போது கனடாவில் குடியேற விரும்புகிறோம். நான் படிக்க விரும்புகிறேன். நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பபிச் சென்றால் தலிபான்கள் எங்களை கொன்றுவிடுவார்கள் என்றார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com