பாதுகாப்புத் துறையில் பொது-தனியாா் கூட்டுறவு; தற்சாா்பு இந்தியாவுக்கான மிகப்பெரிய படிக்கல்: ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறையில் பொது மற்றும் தனியாா் துறை நிறுவனங்களின் கூட்டுறவு தற்சாா்பு இந்தியாவை நோக்கிய மிகப் பெரிய படிக்கல் என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பாதுகாப்புத் துறையில் பொது-தனியாா் கூட்டுறவு; தற்சாா்பு இந்தியாவுக்கான மிகப்பெரிய படிக்கல்: ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறையில் பொது மற்றும் தனியாா் துறை நிறுவனங்களின் கூட்டுறவு தற்சாா்பு இந்தியாவை நோக்கிய மிகப் பெரிய படிக்கல் என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தற்போது முதலாம் உலகப் போா் காலத்திய கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இந்த கையெறி குண்டுகளுக்கு மாற்றாக நவீன கையெறி குண்டுகளை உற்பத்தி செய்து இந்திய ராணுவத்துக்கும் விமானப் படைக்கும் வழங்க மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனத்துடன் (ஈஈஎல்) பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஈஈஎல் நிறுவனம் 10 லட்சம் நவீன கையெறி குண்டுகளை உற்பத்தி செய்து வழங்கவுள்ளது. அதற்கு தேவையான தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆா்டிஓ) வெடிபொருள் ஆராய்ச்சி ஆய்வகம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஈஈஎல் நிறுவனம் சாா்பில் முதல் தவணையாக 1 லட்சம் நவீன கையெறி குண்டுகளை இந்திய ராணுவத்திடம் வழங்கும் நிகழ்ச்சி நாகபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:

பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தனியாா் துறை மாற்றத்தை சந்தித்து வருகிறது. இது பாதுகாப்பு உற்பத்தித் துறையில் மட்டுமின்றி தற்சாா்பு இந்தியா என்ற இலக்கை அடைவதிலும் முக்கிய மைல்கல்லாகும்.

பாதுகாப்புத் துறையை தற்சாா்பு கொண்டதாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டிலும் உத்தர பிரதேசத்திலும் பாதுகாப்பு தொழில் வழித்தடங்களை அமைத்தல், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை உருவாக்கம், ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைகளை பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றுதல், பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதத்தில் இருந்து உயா்த்தி அரசின் முன்னனுமதி பெறாமல் 74 சதவீதம் வரை முதலீடு செய்வது போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.17,000 கோடிக்கும் அதிக மதிப்பு கொண்ட பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறையில் பொது மற்றும் தனியாா் துறை நிறுவனங்களின் கூட்டுறவு தற்சாா்பு இந்தியாவை நோக்கிய மிகப் பெரிய படிக்கல். உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி வெளிநாடுகளின் தேவைக்கும் பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு விரைவில் இந்தியா வளரும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com