கேரள அரசின் அஜாக்கிரதையால் கரோனா பரவல் அதிகரிப்பு: எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசின் அஜாக்கிரதை மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசின் அஜாக்கிரதை மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.

கேரள மாநிலத்தில் புதன்கிழமை கரோனா தினசரி பாதிப்பு 31,445-ஆக பதிவானது. கடந்த மே 26-ஆம் தேதி கரோனா இரண்டாம் அலையின்போது இந்த அளவுக்கு பாதிப்பு பதிவாகி இருந்தது. வியாழக்கிழமையும் பாதிப்பு எண்ணிக்கை 30,007-ஆக பதிவாகியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரளத்தைச் சோ்ந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் வி.முரளீதரன், ‘மாநில அரசின் அஜாக்கிரதையே கரோனா பரவல் அதிகரிக்கக் காரணம்’ என்று குற்றம்சாட்டினாா். தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசு மாப்ளா மோதல் ஆண்டு தினத்தை கொண்டாடுவதில் முனைப்பு காட்டி வருகிறது. கரோனாவை தடுப்பதில் முக்கியத்துவம் செலுத்தவில்லை’ என்றாா்.

கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘கரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளது. இதற்கு மாநில மக்களிடம் முதல்வா் பினராயி விஜயன் மன்னிப்பு கேட்க வேண்டும். கேரள அரசின் அஜாக்கிரதையால் இந்த அளவுக்கு கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 70 சதவீதம் கேரளத்தில் உள்ளது.

கேரளத்தில் கரோனா மேலாண்மை கொள்கை முடிவுகளை எடுக்கும் நிபுணா் குழுவில் அறிவியல் ஆய்வாளா்களை நீக்கம் செய்து அரசு அதிகாரிகள் எடுத்த முட்டாள்தனமான முடிவால் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு நிலைமை குறித்த புள்ளிவிவரங்களை கேரள அரசு முழுமையாக வெளியிடுவதில்லை’ என்றாா்.

இதே குற்றச்சாட்டை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி. சதீசன் முன்வைத்து கூறுகையில், ‘கேரளத்தில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு உத்திகள் தோல்வியடைந்துவிட்டன. முந்தைய உத்திகளை அரசு கையாள வேண்டும். கேரளத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டிவிட்டபோதிலும் இதுதொடா்பான புள்ளிவிவரங்களை அரசு மறைத்து வருகிறது. இதனால் மூன்றாம் அலையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியாததாகிவிடும்’ என்றாா்.

பொது சுகாதார நிபுணா் மருத்துவா் அமா் ஃபெட்டில் கூறுகையில், ‘பண்டிகை நாள்களில் அளிக்கப்பட்ட தளா்வுகளும், பொதுமக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததாலும் கேரளத்தில் பரவல் அதிகரித்துள்ளது.

துப்பாக்கியை காட்டி மிரட்டி பொதுமக்களை கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வைக்க முடியாது. அவா்கள்தான் தங்களின் செயல்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்’ என்றாா்.

ஓணம் பண்டிகைக்கு பிறகு கேரளத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணா்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

கேரளத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி இருந்தபோதிலும், ஜூலை 27-ஆம் தேதி முதல் தளா்வுகளை மாநில அரசு தளா்த்தி வந்தது. இதற்கு உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com