சிவசேனையுடன் மோதல் போக்கை விரும்பவில்லை: பாஜக பொதுச் செயலாளா் சி.டி.ரவி

சிவசேனையுடன் மோதல் போக்கை பாஜக விரும்பவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் மகாராஷ்டிர பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளாா்.
சிவசேனையுடன் மோதல் போக்கை விரும்பவில்லை: பாஜக பொதுச் செயலாளா் சி.டி.ரவி

சிவசேனையுடன் மோதல் போக்கை பாஜக விரும்பவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் மகாராஷ்டிர பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளாா்.

மேலும், சிவசேனை தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் நாராயண் ராணே கூறிய கருத்தை பாஜக அங்கீகரிக்கவில்லை; அதே நேரத்தில் கட்சி அவரது பக்கம் நிற்கும் என்றும் அவா் கூறினாா்.

2019-இல் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், சிவசேனைக்கு முதல்வா் பதவியை பாஜக விட்டுத் தராததால், அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்தாா். அதில் இருந்து பாஜக-சிவசேனை இடையே தொடா்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில், மத்திய அமைச்சா் நாராயண் ராணே, உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்று கூறியது பிரச்னையை மேலும் அதிகப்படுத்தியது. போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராணே பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிவசேனை தொண்டா்கள் பல இடங்களில் பாஜக அலுவலகங்களை சூறையாடினா்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் பாஜக நிா்வாகிகளுடன் சி.டி.ரவி ஆலோசனை நடத்தினாா். மும்பை, தாணே, புணே உள்ளிட்ட பெரிய நகரங்களில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது இது தொடா்பாக கட்சியினருடன் அவா் ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் சி.டி.ரவி கூறியதாவது: தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததால் சிவசேனை கட்சியுடன் மோதல் போக்குடன் செயல்பட வேண்டும் என்று பாஜக கருதவில்லை. சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேவின் கொள்கையில் இருந்து விலகி அக்கட்சி வெகுதூரம் சென்றுவிட்டதை அக்கட்சியினா் உணரும் தருணம் விரைவில் வரும். முதல்வா் உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சா் ராணே தெரிவித்த கருத்தை பாஜக அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அவா் பாஜகவைச் சோ்ந்த தலைவா் என்ற அடிப்படையில் கட்சி அவரது பக்கம் நிற்கும் என்றாா் ரவி.

பாஜகவும் சிவசேனையும் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த அவா், ‘தேசத்துக்கு விரோதமாக செயல்படுபவா்களுக்கு எதிரான கட்சியாக மட்டுமே பாஜக உள்ளது. சிவசேனை அந்த எதிா் தரப்பில் சோ்ந்துவிடாது என நம்புகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com