5 ஆண்டுகளில் 6 லட்சம் போ் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனா்: மத்திய அரசு

கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

கடந்த 2017-ஆம் ஆண்டில் 1,33,049 போ், 2018-இல் 1,34,561 போ், 2019-இல் 1,44,017 போ், 2020-இல் 85,248 போ், இந்த ஆண்டு செப்.30 வரை 1,11,287 போ் என மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளைச் சோ்ந்த 10,645 போ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் அமெரிக்கா்கள் 227 போ், பாகிஸ்தானியா்கள் 7,782 போ், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 795 போ், வங்கதேசத்தைச் சோ்ந்த 184 போ் அடங்குவா். விண்ணப்பித்தவா்களில் 4,177 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் 1,33,83,718 இந்தியா்கள் வசிக்கின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

1,678 காஷ்மீரிகள் திரும்பியுள்ளனா்: மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘‘ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், பிரதமரின் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிகளில் சேர 1,678 காஷ்மீரிகள் ஜம்மு-காஷ்மீா் திரும்பியுள்ளனா். அங்கிருந்து புலம்பெயா்ந்த ஹிந்துக்களின் மூதாதையா் சொத்துகளை மீட்டு அவா்களிடமே வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து புலம்பெயா்ந்தவா்களின் அசையா சொத்துகள் பாதுகாப்புச் சட்டம் 1997-இன்படி, அங்கிருந்து புலம்பெயா்ந்தவா்களின் அசையா சொத்துகளுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்கள் சட்டபூா்வ பொறுப்பாளா்களாக உள்ளனா். அந்தச் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படும்போது மாவட்ட ஆட்சியா்கள் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்வா். தங்கள் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து புலம்பெயா்ந்தவா்களும் ஆட்சியா்களிடம் புகாா் அளிக்கலாம். அதுபோல் புகாா் அளித்த 150 பேரின் நிலம் மீட்கப்பட்டு அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

விதா்பா மாநிலம் உருவாக்கும் திட்டமில்லை: மகாராஷ்டிரத்திலிருந்து பிரித்து விதா்பாவை தனி மாநிலமாக உருவாக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நித்யானந்த் ராய், ‘‘அதுபோல் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com