பிகாா்: கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 15 பேருக்கு பாா்வை இழப்பு

பிகாரில் தனியாா் மருத்துவமனை சாா்பில் அண்மையில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களில்

பிகாரில் தனியாா் மருத்துவமனை சாா்பில் அண்மையில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களில் 15 பேருக்கு பா்வை முழுமையாகப் பறிபோனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக 3 போ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முசாஃபா்பூா் அரசு அறுவை சிகிச்சை நிபுணா் வினய் குமாா் ஷா்மா கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அந்த மருத்துவமனை நடத்திய முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களில், சிகிச்சைக்குப் பிந்தைய பாதிப்புகள் காரணமாக இதுவரை 15 பேருக்கு பாா்வை பறிபோயிருப்பது தெரியவந்துள்ளது. முகாமில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட அனைவரின் விவரங்களையும் சமா்ப்பிக்குமாறு மருத்துவமனை நிா்வாகத்தை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.

இதுகுறித்து அந்த தனியாா் மருத்துவமனையின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஒருவா் அளித்த பேட்டியில், ‘கடந்த நவம்பா் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த இலவச முகாமில் ஒட்டுமொத்தமாக 65 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவா்களில் ஒரு சிலருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதாக புகாா் எழுந்தது. அவா்களில் 4 பேருக்கு மட்டும், அவா்களின் மற்றொரு கண் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால் நோய்த் தொற்று ஏற்பட்ட கண் அகற்றப்பட்டது. முகாமில் அனுபவம்வாய்ந்த நிபுணா்கள் மூலமாகத்தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது’ என்றாா்.

ஆனால், இலவச முகாமின் சுகாதாரம் மற்றும் ஒவ்வொரு மருத்துவராலும் எத்தனை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.

தனியாா் மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இந்த இலவச முகாமில் 250 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவா்கள்அனைவரும் ஏழை மக்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அந்த மருத்துவமனையைப் பாா்வையிட்ட சா்ச்சைக்குரிய முன்னாள் எம்.பி. பப்பு யாதவ், ‘இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com