
இடைநீக்கத்திற்கு எதிராக போராடி வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கூட்டத்தொடரின் முதல் நாளில், கடந்த மழைக்கால கூட்டத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இடைநீக்கத்தை கண்டித்து கடந்த 3 நாள்களாக அனைத்து எதிர்க்கட்சியினரும் இணைந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சியின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற காந்தி சிலையின் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட புகைப்படங்களை கையில் ஏந்தி போராடினர்.