1100 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி பெற்ற அரசியல் கட்சிகள்; தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக

ஐந்து மாநில தேர்தலில், பாஜக, காங்கிரஸ் உள்பட 19 அரசியல் கட்சிகள் மொத்தம் 1,100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்றுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

இதனிடையே, தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்ற நிதி தொடர்பான தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐந்து மாநில தேர்தலில், பாஜக, காங்கிரஸ் உள்பட 19 அரசியல் கட்சிகள் மொத்தம் 1,100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்றுள்ளன. அதேபோல, சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேலான நிதியைச் செலவிட்டுள்ளன. பெரும்பகுதி நிதி விளம்பரங்கள் மற்றும் நட்சத்திர பிரமுகர்களின் பரப்புரை பயணங்களுக்கே செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 5 மாநில தேர்தல் போது அதிகபட்சமாக பாஜக 611.692 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. அதில், 252 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அதில் கட்சி விளம்பரத்திற்காக 85.26 கோடி ரூபாயும் பரப்புரையின்போது நட்சத்திர தலைவர்களின் பயணச் செலவுக்காக 61.73 கோடி ரூபாயும் செலவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சி 193.77 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. அதில் விளம்பரத்திற்காக 31.451 கோடி ரூபாய், பயணச் செலவுக்காக 20.40 ரூபாய் உள்பட மொத்தம் 85.625 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது. 

இதையடுத்து, சுமார் 134 கோடி ரூபாயைப் பெற்ற திமுக 3ஆவது இடத்தில் உள்ளது. விளம்பரத்திற்காக 52.144 கோடி ரூபாய், தலைவர்களின் பயணச் செலவுகளுக்காக 2.4 கோடி ரூபாய் என மொத்தம்  114.14 கோடி ரூபாயை திமுக செலவிட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சி 14.46 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. 

அதில், மொத்தம் 57.33 கோடி ரூபாயை அதிமுக செலவிட்டுள்ளது. குறிப்பாக 56.756 கோடி ரூபாயை விளம்பரத்திற்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8.05 கோடி ரூபாயை நிதியாகப் பெற்ற நிலையில், விளம்பரத்திற்காக 3.506 கோடி ரூபாய் உள்பட மொத்தம் 5.68 கோடி ரூபாயை அக்கட்சி செலவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 79.244 கோடி ரூபாயும் திரிணாமுல் காங்கிரஸ் 56.328 கோடி ரூபாயும் நிதியாகப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com