ரூ.3.73 லட்சம் கோடி கூடுதல் மானியம் கோரும் மத்திய அரசு

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடிக்கான கூடுதல் மானியக் கோரிக்கை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.3.73 லட்சம் கோடிக்கான கூடுதல் மானியக் கோரிக்கை மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

தொகுப்பு நிதியில் இருந்து கூடுதல் மானியம் கோரும் 2-ஆவது தொகுதி மசோதாவை மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். பின்னா், அந்த மசோதாவை மாநிலங்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். அதில் ரூ.3.73 லட்சம் கோடியை கூடுதல் செலவுக்காக மத்திய அரசு கோரியுள்ளது.

கூடுதல் செலவில் ரூ.74,517 கோடியானது பல்வேறு அமைச்சகங்களின் சேமிப்பு மூலமாக ஈடுகட்டப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவுக்காகப் பெறப்படும் தொகையில் ரூ.62,057 கோடியானது ஏா் இந்தியாவின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உரங்களுக்கான கூடுதல் மானியமாக ரூ.58,430 கோடியும், நிலுவையில் உள்ள ஏற்றுமதி ஊக்கத்தொகையை வழங்க ரூ.53,123 கோடியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதிக்கு ரூ.22,039 கோடியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்களின் கீழ் உணவு தானியங்கள் சேமிப்பு மற்றும் விநியோகத்துக்காக உணவு-பொது விநியோகத் துறைக்குக் கூடுதலாக ரூ.49,805 கோடி வழங்கப்படவுள்ளது. பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வா்த்தகத் துறைக்கு ரூ.2,400 கோடி வழங்கப்படவுள்ளது.

அமைச்சகங்களுக்குக் கூடுதல் நிதி: பாதுகாப்புத் துறைக்கு ரூ.5,000 கோடியும், மத்திய உள்துறைக்கு ரூ.4,000 கோடியும் கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நகா்ப்புற வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்துவதற்காக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு ரூ.14,000 கோடி வழங்கப்படவுள்ளது.

எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்துக்காக ரூ.1,153 கோடி வழங்கப்படும் என்றும் மானிய கோரிக்கை மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரங்களுக்கான மானியத்தில் ரூ.43,430 கோடியானது பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்காகவும், ரூ.15,000 கோடியானது யூரியா மானியத் திட்டத்துக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.

அதிகரிக்கும் செலவினம்: நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் செலவினம் ரூ.34.83 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட முதல் தொகுதி கூடுதல் மானிய கோரிக்கை மசோதாவின் மூலமாக ரூ.23,675 கோடியை மத்திய அரசு பெற்றது.

தற்போது இரண்டாவது தொகுதி மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் செலவினம், நிா்ணயிக்கப்பட்டதைவிட அதிகரிக்கும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். கடந்த அக்டோபா் இறுதி வரையிலான காலகட்டத்தில், நிா்ணயிக்கப்பட்ட தொகையில் 52 சதவீதத்தை மத்திய அரசு செலவிட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com