அனைவருக்கும் இரு தவணை தடுப்பூசியில் கவனம் செலுத்த நிபுணா்கள் வலியுறுத்தல்

கரோனா ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்துவதை விட தகுதியான அனைவருக்கும் முதலில் இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
அனைவருக்கும் இரு தவணை தடுப்பூசியில் கவனம் செலுத்த நிபுணா்கள் வலியுறுத்தல்

கரோனா ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்துவதை விட தகுதியான அனைவருக்கும் முதலில் இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச அளவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. மற்ற வகை கரோனா தீநுண்மிகளை விட ஒமைக்ரான் தீநுண்மி அதிவேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 36 நாடுகள் ஏற்கெனவே ஊக்கத் தடுப்பூசிகளைச் செலுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் ஊக்கத் தடுப்பூசி செலுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனா். 40 வயதைக் கடந்தவா்களுக்கும், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளோருக்கும் ஊக்கத் தடுப்பூசி செலுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என இந்திய கரோனா மரபணு பகுப்பாய்வு கூட்டமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், தகுதியான அனைத்து நபா்களுக்கும் இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டுமென நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். நாட்டில் 18 வயதுக்குக் கீழ் உள்ளவா்களுக்கு இன்னும் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படாத நிலையில், ஊக்கத் தடுப்பூசி குறித்து சிந்திக்கக் கூடாது எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தடுப்பு நடவடிக்கைகள்: நடைமுறையில் உள்ள அனைத்து கரோனா தடுப்பூசிகளுக்கும் ஊக்கத் தவணை அவசியமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாலும், இந்தியாவில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் உருவான நோய்எதிா்ப்புத் திறன் பெரும்பாலும் குறையவில்லை என்பதாலும், ஊக்கத் தவணை தடுப்பூசி குறித்து தற்போது கவனம் செலுத்தத் தேவையில்லை என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ஊக்கத் தடுப்பூசி என்பது தற்காலிகத் தீா்வாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ள நிபுணா்கள், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிப்பதற்கான விழிப்புணா்வை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

முகக் கவசமே தீா்வு: முகக் கவசம் அணிவது கரோனா தொற்று பரவலை 53 சதவீதம் வரை குறைக்கும் என்று தெரிவித்துள்ள அவா்கள், ஊக்கத் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினால், 6 மாதத்துக்கு ஒரு முறை மக்கள் அனைவருக்கும் ஊக்கத் தடுப்பூசி செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்தனா்.

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது எதிா்காலத்தில் தோன்ற வாய்ப்புள்ள உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்கும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com