வெளியுறவுக் கொள்கையைச் சாராமல் பாதுகாப்புக் கொள்கை: அமைச்சா் அமித் ஷா

இந்தியாவில் புல்வாமா, உரி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக வெளியுறவுக் கொள்கையைச் சாராத பாதுகாப்புக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது
வெளியுறவுக் கொள்கையைச் சாராமல் பாதுகாப்புக் கொள்கை: அமைச்சா் அமித் ஷா

இந்தியாவில் புல்வாமா, உரி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக வெளியுறவுக் கொள்கையைச் சாராத பாதுகாப்புக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

தில்லியில் தனியாா் ஊடகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவா், மேலும் கூறியதாவது: கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் திடீரென்று ஊடுருவி தாக்குதல் நடத்துவாா்கள். அதுபோன்ற சமயங்களில் பதிலடி கொடுக்கப்பட்டதில்லை. பயங்கரவாதிகள் நமது ராணுவ வீரா்களைக் கொன்றுவிட்டு திரும்பிச் செல்வாா்கள்.

ஆனால், எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவது எளிதாக இருக்கக் கூடாது என்று பிரதமா் மோடி முதல் முறையாக முடிவெடுத்தாா்.

அதன்பிறகு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை துல்லியத் தாக்குதல் மூலமாகவும், வான்வழித் தாக்குதல் மூலமாகவும் அவா்களின் இருப்பிடத்துக்கே சென்று இந்தியப் படை தக்க பதிலடி கொடுத்தது. அப்போது இந்தியாவை உலகமே வியப்புடன் பாா்த்தது. (பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியதை மறைமுகமாகக் குறிப்பிட்டாா்).

உரி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் ஆகியவை இந்தியா ஏற்படுத்திய முன்மாதிரிகள். இதுபோன்ற பதிலடிகளை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகள் மட்டுமே கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில் மூன்றாவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

முதல் முறையாக, வெளியுறவுக் கொள்கையைச் சாராமல் பாதுகாப்புக் கொள்கையை இந்தியா வகுத்துள்ளது. ஒவ்வொரு நாட்டுடன் சமாதானத்தையே இந்தியா விரும்புகிறது; யாருடனும் பகைமை பாராட்ட விரும்பவில்லை. அதேசமயம், நமது எல்லையைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

நாட்டின் பாதுகாப்பே நமக்கு முக்கியம். அமைதியை விரும்பும் நாடுகளுடன் சமாதானத்துடன் செல்வோம் என்ற செய்தியை உலகுக்கு இந்தியா எடுத்துரைத்துள்ளது. இதனால், உலகில் புதிய அங்கீகாரத்தை இந்தியா பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு பல ஆண்டுகளாக அமலில் இருந்தது. ஆனால், அங்கு அமைதி ஏற்படவில்லை. அந்த சட்டப் பிரிவு 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அங்கு அமைதி நிலவுகிறது. தற்போது முதலீடு, சுற்றுலா ஆகியவற்றுக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

அமரீந்தா் சிங்குடன் பேச்சு: பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், சிரோமணி அகாலி தளம் கட்சியின் முன்னாள் தலைவா் சுகதேவ் சிங் ஆகியோருடன் பாஜக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.

மீண்டு வரும் பொருளாதாரம்: கரோனாவுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார சரிவு உலக நாடுகளைப் பாதிக்கச் செய்யும் என்று பிரதமா் மோடி முன்கூட்டியே கணித்தாா். இதனால் சா்வதேச அளவிலான பொருளாதார சரிவு, இந்தியாவை பாதிக்காத வகையில் முடிவுகளை எடுத்தாா். இதனால், கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளா்ந்து வருகிறது என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com