குஜராத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, உறவினருக்கு கரோனா

ஜிம்பாப்வேயிலிருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி, உறவினருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, உறவினருக்கு கரோனா
குஜராத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, உறவினருக்கு கரோனா


ஜாம்நகர்: ஜிம்பாப்வேயிலிருந்து திரும்பிய குஜராத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி, உறவினருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விருவரின் மாதிரிகளும், கரோனா வைரஸ் மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஜாம்நகர் மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரோனா உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத் ஜாம்நகர் வந்தவருக்கு கடந்த 4ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்திருந்தது.

இந்த நிலையில், தற்போது, அவருடன் ஜிம்பாப்வேயிலிருந்து வந்த அவரது மனைவி மற்றும் ஜாம்நகரில் வசித்து வரும் மனைவியின் சகோதரருக்கு ஞாயிறன்று கரோனா உறுதி செய்யப்பட்டது. இதர குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா இல்லை என்று தெரிய வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலிருந்து யாரும் செல்ல வேண்டாம் என்று தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் வசிப்போர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தில்லி உள்ளிட்ட இடங்களில் 21 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குஜராத்துக்கு வந்த 72 வயது வெளிநாடு வாழ் இந்தியருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது மாதிரிகள் மரபணு வரிசைமுறை சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜாம்நகரைச் சேர்ந்த இவர், கடந்த பல ஆண்டுகளாக ஜிம்பாப்வேயில் வசித்து வருகிறார். அவர் தனது மாமனாரை சந்திக்க வந்தபோது ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பெங்களூருவை சேர்ந்த 46 வயது மருத்துவருக்கும் இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 66 வயது முதியவருக்கும் ஒமைக்ரான் இருப்பது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் இரண்டு தவணை தடுப்பூசியை ஏற்கனவே செலுத்தி கொண்டதும் அவர் வெளிநாடுகளுக்கு எங்கும் பயணம் செய்யவில்லை என்பதும் பின்னர் தெரியவந்தது. ஆனால், அவருக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர், இந்திய வந்திருந்த போது கரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருந்தார்.  தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் சோதனை மற்றும் கண்காணிப்பை நாடு முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் கடும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com