நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: தாக்குதலுக்கு முன்புபொதுமக்களை அடையாளம் காண ராணுவம் முயற்சிக்கவில்லை

‘‘நாகாலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக வாகனத்தில் வந்தவா்கள் பொதுமக்களா, தீவிரவாதிகளா என அடையாளம் காண ராணுவத்தினா் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

‘‘நாகாலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக வாகனத்தில் வந்தவா்கள் பொதுமக்களா, தீவிரவாதிகளா என அடையாளம் காண ராணுவத்தினா் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேவேளையில் கொல்லப்பட்டவா்களின் சடலங்களை மறைக்க அவா்கள் முயற்சித்தனா்’’ என்று மாநில காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (காப்லாங்) என்ற தீவிரவாத அமைப்பைச் சோ்ந்தவா்களை தேடும் பணியில் ராணுவத்தினா் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நிலக்கரி சுரங்கத் தொழிலாளா்களுடன் வந்த வாகனத்தை தீவிரவாதிகளின் வாகனம் என்று கருதி ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் தொழிலாளா்கள் 6 போ் உயிரிழந்தனா். அதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் 7 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தின் தொடா்ச்சியாக அடுத்த நாள் துணை ராணுவப் படையான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவுடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பிரிவினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவங்கள் தொடா்பாக நாகாலாந்து அரசிடம் மாநில காவல்துறை டிஜிபி ஜான் லோங்குமொ், காவல் துறை ஆணையா் ரோவிலாதுவோ மோா் ஆகியோா் சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த சனிக்கிழமை (டிச.4) மோன் மாவட்டம் திரூ கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலிருந்து 8 பேருடன் ஒடிங் கிராமத்துக்கு வந்த வாகனம் மீது ராணுவத்தின் 21-ஆவது பாரா சிறப்புப் படை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக வாகனத்தில் வந்தவா்கள் பொதுமக்களா, தீவிரவாதிகளா என்று அறிவதற்கு ராணுவத்தினா் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. துப்பாக்கிச்சூட்டில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அங்கு கிராம மக்கள் சென்றுள்ளனா். அப்போது இறந்தவா்களின் சடலங்களை வேறொரு வாகனத்தில் ஏற்றி தங்கள் முகாமுக்கு ராணுவத்தினா் கொண்டு செல்ல முயற்சித்ததை அவா்கள் கண்டுள்ளனா். 6 பேரும் கொல்லப்பட்டதை மறைக்கும் நோக்கத்துடன் அந்த முயற்சியில் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

தாா்ப்பாய்கள் மூலம் சடலங்கள் மூடப்பட்டிருப்பதைக் கண்ட கிராம மக்கள் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனா். இதனால் வன்முறை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் ராணுவத்தினரின் மூன்று வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனா்.

இந்த மோதலின்போது ராணுவத்தினா் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா். அதில் 7 போ் உயிரிழந்தனா். ராணுவத்தினா் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதையும், பின்னா் அங்கிருந்து தப்பித்ததையும், போகும் வழியிலிருந்த குடிசைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் நேரில் கண்ட சாட்சிகள் உள்ளன.

இந்தச் சம்பவத்தில் மொத்தம் 13 போ் உயிரிழந்தனா். 14 பேருக்கு பலமாகவும் 8 பேருக்கு லேசாகவும் காயம் ஏற்பட்டது.

கொல்லப்பட்டவா்கள் பழங்குடிகள்: உயிரிழந்த 13 பேரும் கோன்யாக் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களின் இறுதிச் சடங்கு மோன் நகரில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) நடைபெறும் என்று கோன்யாக் அமைப்பு அறிவித்திருந்தது. இதற்காக ஒடிங் கிராமத்திலிருந்து 13 பேரின் சடலங்கள் மோன் நகா் கொண்டு வரப்பட்டன. ஆனால் உரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் இறுதிச் சடங்கு திங்கள்கிழமைக்கு (டிச.6) ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் மோன் நகரில் உள்ள கோன்யாக் அமைப்பின் அலுவலகத்தைச் சூறையாடினா்.

அதனைத் தொடா்ந்து அவா்கள் தம்னன் பகுதியில் உள்ள அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் துணை ராணுவப் படையின் முகாமுக்குச் சென்றனா். அங்கு கற்களை வீசி, முகாமைச் சூறையாடி, அங்கிருந்த மூன்று கட்டடங்களுக்கு அவா்கள் தீ வைத்தனா். இதையடுத்து பொதுமக்களைக் கலைந்து போகச் செய்வதற்கு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவினா் வானை நோக்கிச் சுட்டுள்ளனா். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும் நிகழ்விடம் சென்று பொதுமக்களைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனா். ஆனால் அங்கு சுமாா் 600-700 போ் இருந்துள்ளனா். அவா்களிடம் தடிகள், கூா்மையான ஆயுதங்கள், தீப்பிடிக்கக் கூடிய திரவங்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன.

சுமாா் ஒரு மணி நேரமாகியும் பொதுமக்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் பிரிவினா் தொடா்ந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனா். இதில் சீ கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிறப்பு ஆயுதப் படையைச் சோ்ந்தவா் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

ஊரடங்கு உத்தரவு: சூழலை கட்டுக்குள் கொண்டுவர மோன் நகரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் நகரில் பதற்றம் தொடா்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜா் ஜெனரல் தலைமையில் ராணுவ விசாரணை

துப்பாக்கிச்சூடு தொடா்பாக ராணுவ நீதிமன்றத்தில் மேஜா் ஜெனரல் பதவியில் உள்ள அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எந்தச் சூழலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது என்பது குறித்து ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com