நாகாலாந்து: 2 மாதத்தில் தந்தையை இழந்த குழந்தை; 9 நாளில் கணவரை இழந்த பெண்

நாகாலாந்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியானவர்களைப் பற்றிய தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
நாகாலாந்து: 2 மாதத்தில் தந்தையை இழந்த குழந்தை; 9 நாளில் கணவரை இழந்த பெண்
நாகாலாந்து: 2 மாதத்தில் தந்தையை இழந்த குழந்தை; 9 நாளில் கணவரை இழந்த பெண்

நாகாலாந்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியானவர்களைப் பற்றிய தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகளைத் தேடிச் சென்ற ராணுவத்தினா், நிலக்கரி சுரங்கத் தொழிலாளா்கள் சென்ற வேன் மீது தவறுதலாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போ் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் ராணுவத்தினா் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். தற்காப்புக்காக ராணுவத்தினா் மீண்டும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 போ் உயிரிழந்தனா். மோன் நகரத்தில் ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. கொல்லப்பட்டவர்களில் 9 நாள்களுக்கு முன்பு திருமணமானவரும், இரண்டு மாதங்களுக்கு முன்பு தந்தையான நபரும் அடங்குவர்.

இவர்கள் மட்டுமல்ல, புற்றுநோயுடன் போராடி வரும் தந்தையை கவனித்து வந்த மகனும், வயதான தாயை பராமரித்து வந்த மகளும் அடங்குவர்.

நவம்பர் 25ஆம் தேதி, ஹோகப் கோன்யாக் என்ற 38 வயது சுரங்கத் தொழிலாளிக்கு திருமணமாகியுள்ளது. அனைத்து கிராம மக்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்று, வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.  திருமணமாகி, வெறும் 9 நாள்களே ஆன நிலையி, கோன்யாக் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். திருமணமாகி 11வது  நாளில், அதே கிராமத்தில், அவருக்கு இறுதிச் சடங்குகள், அனைத்து கிராம மக்கள் முன்னிலையிலும் நடந்தது. திருமணம் நடந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில்தான் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடந்ததாகக் கூறி அவரது மனைவி மோங்கலாங் கதறுகிறார்.

துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும், நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். என்னால் இப்போது பேசமுடியவில்லை. பிறகு பேசுகிறேன் என்று கூறியபடியே போனை அணைத்தார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை என்று கூறுகிறார் அவரது மனைவி.

36 வயதாகும் லாங்டன் கோன்யாக், விவசாயியாக உள்ளார், பகுதி நேரமாக சுரங்க வேலைக்கும் செல்வார். கடந்த ஆண்டு அவருக்கு திருமணமான நிலையில், கடந்த செப்டம்பரில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடியபடியே இருக்கும் லாங்டன், தற்போது உயிருடன் இல்லை. 

தங்களது குடும்பத்தில் சம்பாதித்து வந்த ஒரே நபரும் இல்லை. இளம் மருமகளையும், தந்தையை இழந்த குழந்தையையும் எப்படி தேற்றுவோம் என்றே தெரியவில்லை என்கிறால் அவரது தந்தை.

இப்படி, ஒரே மகனை, குடும்பத்தின் ஒரே நம்பிக்கையை என 14 பேரை இழந்த குடும்பங்கள், சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

தங்களுக்கு ரத்தத்தின் மீது கிடைக்கும் நிதி வேண்டாம் என்றும், நீதி மட்டுமே வேண்டும் என்றும் ஒட்டுமொத்தமாக ஒரேக் குரலில் சொல்கிறார்கள் அனைவரும்.

மக்கள் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தேசிய அளவில் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அச்சம்பவம் குறித்து அமைச்சா் அமித் ஷா மக்களவையில் கூறியதாவது, நாகாலாந்தில் நிகழ்ந்த சம்பவத்துக்காக அரசு வருத்தம் தெரிவிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அங்கு கடந்த 4-ஆம் தேதி சோதனை நடத்த ராணுவத்தினா் முடிவெடுத்து அப்பகுதியில் பதுங்கியிருந்தனா்.

அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனையிடுவதற்காக அவா்கள் நிறுத்தக் கூறியுள்ளனா். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் வேகமாகச் செல்ல முயன்றுள்ளது. அந்த வாகனத்தில் தீவிரவாதிகள்தான் உள்ளனா் என நினைத்து, ராணுவத்தினா் துப்பாக்கியால் சுட்டனா். அதற்குப் பிறகுதான் தவறுதலாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அவா்கள் அறிந்தனா். துப்பாக்கிச் சூடு காரணமாக வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 போ் உயிரிழந்தனா்.

தற்காப்புக்காகவே...: துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்த உள்ளூா் மக்கள் ராணுவத்தினா் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினா். அதில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பல வீரா்கள் காயமடைந்தனா். தற்காப்புக்காகவும் கூட்டத்தைக் கலைப்பதற்காகவும் ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 போ் உயிரிழந்தனா். அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் நிலை மீது ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூா் மக்கள் தாக்குதல் நடத்தியதால், அங்கு ராணுவத்தினா் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

கட்டுக்குள் நிலைமை: நாகாலாந்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இச்சம்பவம் தொடா்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிக்குமாறு அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com