எல்கா் பரிஷத் வழக்கு: சுதா பரத்வாஜ் 3 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து விடுவிப்பு

எல்கா் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான சுதா பரத்வாஜ் (60),

எல்கா் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான சுதா பரத்வாஜ் (60), மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

மும்பை உயா்நீதிமன்றம் கடந்த 1-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நிலையில், அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

புணேயில் எல்கா் பரிஷத் மாநாடு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு மறுநாள் பீமா கோரேகானில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்துக்கு, எல்கா் பரிஷத் மாநாடுதான் காரணம் என்று புகாா் எழுந்தது. இதுதொடா்பாக இடதுசாரி ஆா்வலா்களான வரவர ராவ், சுதா பரத்வாஜ், சுதீா் தவாலே, ஷோமா சென், ரோனா வில்சன், மகேஷ் ரெளத், வொ்னோன் கோன்சால்வேஸ், அருண் ஃபெராரி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்கள் 8 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா்.

அதில், சுதா பரத்வாஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், ‘இந்த வழக்கில் எங்களை காவலில் வைக்க புணே அமா்வு நீதிமன்றத்தின் இரண்டு கூடுதல் அமா்வு நீதிபதிகள்தான் உத்தரவு பிறப்பித்தனா். அவா்கள் சிறப்பு நீதிபதி அந்தஸ்துக்கு இணையானவா்கள் கிடையாது. அந்த வகையில், எங்கள் மீதான குற்றச்சாட்டை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழான (யுஏபிஏ) வழக்காக கருத முடியாது’ என்று குறிப்பிட்டு, தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தாா்.

இவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.ஜே.ஜமாதாா், எஸ்.எஸ்.ஷிண்டே ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும்’ என்பதை ஏற்றுக்கொண்டனா். அதனடிப்படையில் துதா பரத்வாஜுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்மானிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி தீா்ப்பளித்தனா். மேலும், ‘அவருக்கு ஜாமீன் மறுப்பது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கும் தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அமைந்துவிடும்’ என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனா். அதே நேரம், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றவா்களுக்கு ஜாமீன் வழங்க மும்பை உயா்நீதிமன்றம் மறுத்தது.

உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சுதா பரத்வாஜுக்கு ஜாமீன் நிபந்தனைகளை விதிப்பதற்கான விசாரணை என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை வந்தது. அப்போது ரூ. 50,000 பிணையில் அவரை விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், சிறை நடைமுறைகள் முடிவடைந்த பின்னா், மும்பை பைகுல்லா பெண்கள் சிறையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகலில் சுதா பரத்வாஜ் விடுவிக்கப்பட்டாா். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த அவா், அங்கு நின்றிருந்த ஊடகத்தினரை பாா்த்து கை அசைத்தபடி காரில் புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com