தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தில்லி காஜிப்பூா் எல்லையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விவசாயிகள்.
தில்லி காஜிப்பூா் எல்லையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விவசாயிகள்.

மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து மத்திய வேளாண் துறைச் செயலா் கையொப்பமிட்டு கடிதம் அளித்ததையெடுத்து, போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாகவும், சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வாா்கள் என்றும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) வியாழக்கிழமை அறிவித்தது.

எனினும், ஜனவரி 15-ஆம் தேதி கூடி ஆலோசிக்க உள்ளதாகவும், அப்போது மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என்றும் விவசாய சங்கத் தலைவா்கள் தெரிவித்தனா்.

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவாா்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமா் மோடி நவம்பா் 19-ஆம் தேதி அறிவித்தாா். இந்த சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து, சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பின்னரும் போராட்டம் தொடா்ந்ததால், மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஐவா் குழு கடந்த சனிக்கிழமை அமைக்கப்பட்டது.

விவசாயிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. எனினும், இந்த வாக்குறுதியை அரசு கடிதத்தில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்று விவசாயிகள் செவ்வாய்க்கிழமை புதிய நிபந்தனை விதித்தனா்.

போராட்டம் முடிவு: இந்நிலையில், அனைத்து கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் தெரிவித்து மத்திய வேளாண் துறைச் செயலா் சஞ்சய் அகா்வால் அனுப்பிய கடிதம் வியாழக்கிழமை காலை எஸ்கேஎம் அமைப்பினரிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் பேசிய எஸ்கேஎம் அமைப்பின் செய்தித்தொடா்பாளா் ராகேஷ் டிகைத், ‘போராட்டம் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. சனிக்கிழமை முதல் விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்புவாா்கள். ஜனவரி 15-ஆம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்போம். அப்போது மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

அரசியல் கட்சி கூடாது: இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி எஸ்கேஎம் அமைப்பினா் அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என்றும் அப்படி சேர விரும்புவோா் அமைப்பைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த அமைப்பின் குழு உறுப்பினா் தா்ஷன் பால் தெரிவித்தாா்.

பாஜகவுக்கு வலுச்சோ்க்கும்: விவசாயிகளின் இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜக உக்தி வகுக்க வலுச் சோ்க்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் சஞ்சீவ் பல்யான் கூறுகையில், ‘பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கையால் விவசாயிகள் மனநிறைவோடு வீடு திரும்புகிறாா்கள். இது பாஜகவின் பலத்தை அதிகரிக்கும்’ என்றாா்.

வரவேற்பு: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சா் பதவியிலிருந்தும் விலகிய சிரோமணி அகாலி தளக் கட்சியின் மூத்த தலைவா் ஹா்சிம்ரத் கெளா் விவசாயிகளின் முடிவை வரவேற்று கூறுகையில், ‘இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. விவசாயிகளின் மன காயங்கள் ஆற நேரமாகும்’ என்றாா்.

மத்திய அரசின் கடித விவரம்

மத்திய வேளாண்துறை செயலா் சஞ்சய் அகா்வால் அளித்துள்ள கடிதத்தில், ‘உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணாவில் விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தில்லி வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

எஸ்கேஎம் அமைப்பிடம் ஆலோசித்த பின்புதான் மின்சார மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையின் தற்போதைய நிலையே தொடரும். விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க ஹரியாணா, உத்தர பிரதேச அரசுகள் பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளன. பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்களில் விவசாயிகள் ஈடுபடுவது குற்ற வழக்காகாது’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com