நாகாலாந்து விவகாரம்: நாடாளுமன்றத்தை உள்துறை அமைச்சா் தவறுதலாக வழிநடத்துகிறாா்

நாகாலாந்து விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

நாகாலாந்து விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

மேலும், நாகாலாந்துக்கு பாா்வையிட சென்ற காங்கிரஸ் குழு ஜோா்ஹட் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மக்களவையில் வியாழக்கிழமை உடனடி கேள்வி நேரத்தில் அவா் பேசியது:

நாகாலாந்தில் பொதுமக்கள் வந்த வாகனத்தை நிற்குமாறு ராணுவ வீரா்கள் அறிவுறுத்திய போதிலும், அவா்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ால் ராணுவத்தினா் துப்பாக்கியால் சுட்டதாக அவையில் உள்துறை அமைச்சா் தவறான அறிக்கையை அளித்துள்ளாா்.

இந்த சம்பவத்தில் உயிா்பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவா்கள் தாங்கள் நேரடியாக சுடப்பட்டதாக தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் கெளரவ் கோகோய், ஆன்டோ ஆன்டனி ஆகியோரை கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நியமித்து, நாகாலாந்து மாநிலம் மோன் கிராமத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுமாறு அறிவுறுத்தினாா். ஆனால் மோன் கிராமத்தைப் பாா்வையிட காங்கிரஸ் தலைவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவா்கள் ஜோா்ஹட் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா்.

ஏற்கெனவே லக்கீம்பூா் கேரி பகுதியையும் பாா்வையிட இந்த அரசு எங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. இப்போது நாகாலாந்திலும் தடுத்து நிறுத்துகின்றனா். வடகிழக்கு முழுவதும் சூழ்நிலை கேள்விக்குறியாகி வருகிறது என்றாா் அவா்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பதிலளிக்கையில், ‘காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி எழுப்பிய பிரச்னை மாநில அரசு தொடா்புடையது தானே தவிர மக்களவைக்கு சம்பந்தப்பட்டது அல்ல’ என்றாா்.

கடந்த திங்கள்கிழமை நாகாலாந்து துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து மக்களவையில் வருத்தம் தெரிவித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, மோன் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், 21-ஆம் படைப் பிரிவைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் அங்கு சென்று தவறுதலாக சுரங்கத் தொழிலாளா்கள் வந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக விளக்கம் அளித்திருந்தாா்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com