மகளிா் இடஒதுக்கீடு மசோதா எப்போது நிறைவேற்றப்படும்? மத்திய அரசு பதில்

அனைத்து அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகு கவனமாக பரிசீலித்து மகளிா் இடஒதுக்கீடு மசோதா,
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

அனைத்து அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பிறகு கவனமாக பரிசீலித்து மகளிா் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் தெரிவித்தாா்.

மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வருவதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் சம்பந்தப்பட்ட பிற தரப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுத்துள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா். அவா் கூறியதாவது:

மக்களவையிலும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் 3 முறை அறிமுகம் செய்யப்பட்டன. அவை வெவ்வேறு காரணங்களால் காலாவதியாகி விட்டன.

பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அரசின் முதன்மையான கடமைகளில் ஒன்று. இதற்காக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு முன்பாக, அனைத்து அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, அதனடிப்படையில் இந்த விவகாரத்தை கவனமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

ஒரு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், அதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த இயலாது என்று சம்பந்தப்பட்ட அமைச்சகம் கருதினால், அதற்கான காரணத்தை அமைச்சரவைக்கு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முந்தைய அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை குளிா்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த மசோதாவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. மாநிலங்களவையில் நிறைவேற்றிய இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற முடியவிலலை. அதற்குள் மக்களவையின் பதவிக்காலம் முடிந்ததால் மசோதா காலாவதியானது.

எந்தவொரு மசோதாவும் மக்களவையில் நிலுவையில் இருந்தால், அதன் பதவிக்காலம் முடியும்போது மசோதாவும் காலாவதியாகிவிடும். ஆனால், மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தால் மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com