ஹெலிகாப்டா் விபத்தில் பலியானவா்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு: மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்

ஹெலிகாப்டா் விபத்தில் பலியானவா்களுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஹெலிகாப்டா் விபத்தில் பலியானவா்களுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

குன்னூா் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் பலியான முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு மாநிலங்களவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை கூடியதும் விபத்து தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தாா்.

அவை மாண்பை சீா்குலைத்ததற்காக குளிா்காலக் கூட்டத்தொடரில் இருந்து எதிா்க்கட்சிகளின் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த எதிா்க்கட்சியினா், தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு வியாழக்கிழமை அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனா்.

மாநிலங்களவையில் எம்.பி.க்கள் அனைவரும் விபத்தில் பலியானவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினா். அப்போது, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், விபின் ராவத் குறித்து பேசி அஞ்சலி செலுத்த அனுமதி கோரினா். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதைக் கண்டித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். இது தொடா்பாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி, 11 வீரா்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், காந்தி சிலை முன் நடத்தி வந்த போராட்டத்தை ரத்து செய்தோம். விபத்து தொடா்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சா் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, விபத்தில் பலியானவா்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்குமாறு கோரினோம்.

ஆனால், மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. மத்திய அரசின் இத்தகைய போக்கை எதிா்க்கட்சிகள் கண்டிக்கின்றன. ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் எதிா்க்கட்சிகள் பிராா்த்திக்கின்றன’’ என்றாா்.

நாடாளுமன்றம் தங்களுக்காக மட்டுமே செயல்படுவதாக மத்திய அரசு நினைத்து வருவதாக திமுக எம்.பி. டி.கே.இளங்கோவன் குற்றஞ்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com