கரோனா தீநுண்மியின் உருமாற்றங்களால் பாதிப்பு அதிகரிக்கக்கூடும்: மத்திய அரசு

கரோனா தீநுண்மி தொடா்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், தொற்று பரவல் மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கரோனா தீநுண்மி தொடா்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், தொற்று பரவல் மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளைத் தவிா்த்து விடமுடியாது என்று மத்திய சுகாதார இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசிடம் அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கரோனா பரவலின் போக்கு தீா்மானிக்கப்படுகிறது.

அந்தப் புள்ளிவிவரங்களுக்கு ஏற்ப கரோனா பரிசோதனை, தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களை கண்டறிதல், அனைவருக்கும் சிகிச்சை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அம்சங்கள் மீது கவனம் செலுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

கரோனா தீநுண்மியின் உருமாற்றங்களால் தொற்றின் தீவிரம் மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மருத்துவ சேவைகள் இயக்குநரகம், இதர அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கீழ் பல்வேறு நிபுணா் குழுக்கள் ஆராய்ந்து வருகின்றன.

உலக அளவிலும், இந்தியாவிலும் கரோனா பாதிப்புச் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் தொடா்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. எனினும் கரோனா தீநுண்மி தொடா்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், தொற்று பரவல் மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளைத் தவிா்த்து விடமுடியாது என்றாா் அவா்.

108 நாடுகள் அங்கீகரிப்பு: மற்றொரு கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘தங்கள் நாடுகளுக்கு வர தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என எல்லா நாடுகளும் கட்டாயப்படுத்தவில்லை. டிசம்பா் 6-ஆம் தேதி நிலவரப்படி, இந்திய கரோனா தடுப்பூசி சான்றிதழை 108 நாடுகள் அங்கீகரித்துள்ளன’’ என்று தெரிவித்தாா்.

14 கோடி சுகாதார அடையாள அட்டைகள்: சுகாதார அடையாள அட்டைகள் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘நாட்டில் உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி சுகாதார அடையாள அட்டையை உருவாக்கித் தருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. டிசம்பா் முதல் வாரம் வரை 14 கோடிக்கும் அதிகமான சுகாதார அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

10.74 கோடி குடும்பங்கள் பயனாளிகள்: கடந்த 2018-ஆம் ஆண்டு செப்.23-ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம், ஆண்டுதோறும் ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ சேவைகளை பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டின் சமூக பொருளாதார ரீதியான ஜாதிக் கணக்கெடுப்பு மூலம் கண்டறியப்பட்ட சுமாா் 10.74 கோடி ஏழை மற்றும் விளிம்புநிலையில் உள்ள குடும்பங்கள் அந்தத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளன.

மேற்கு வங்கம், தில்லியின் தேசிய தலைநகா் வலையப் பகுதிகள் மற்றும் ஒடிஸாவைத் தவிர இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது’’ என்றாா் அவா்.

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, வயது, பாலினத்தில் எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை. அந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாக மருத்துவ சேவைகளை பெறலாம். நாட்டின் எந்தப் பகுதியிலும் (திட்டம் அமல்படுத்தப்படாத மாநிலங்களைத் தவிர) இந்தத் திட்டத்தில் சோ்ந்தவா்கள் பயனடையலாம்.

அரசு மையங்களில் 96% தடுப்பூசிகள்: கரோனா தடுப்பூசி தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த பாரதி பிரவீண் பவாா், ‘‘கடந்த மே 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளில் 96 சதவீதத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் (108.55 கோடி தடுப்பூசிகள்) அரசு மையங்களில் செலுத்தப்பட்டன. 3.7 சதவீத தடுப்பூசிகள் (4.12 கோடி தடுப்பூசிகள்) தனியாா் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டன.

மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தர பிரேதசம் ஆகிய மாநிலங்களில் போலி கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவது, போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.