
கேரள முதல்வா் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனை மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் முகமது ரியாஸ் திருமணம் செய்து கொண்டது முறைகேடான செயல் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) விமா்சித்த விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக இளைஞா் கூட்டமைப்பின் (டிஒய்எஃப்ஐ) தேசியத் தலைவராக இருந்த முகமது ரியாஸுக்கும் வீணா விஜயனுக்கும் கடந்த ஆண்டு ஜூனில் திருமணம் நடைபெற்றது. நடப்பாண்டுத் தொடக்கத்தில் கேரளத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட முகமது ரியாஸ், வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பிடித்தாா். முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் முகமது ரியாஸுக்குப் பொதுப் பணித்துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள வஃக்பு வாரியத்தின் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின்வசம் ஒப்படைக்க உள்ளதாக இடதுசாரிகள் கூட்டணி தலைமையிலான அரசு அண்மையில் முடிவெடுத்திருந்தது. அந்த முடிவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கடந்த வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிா்வாகி அப்துரகுமான் கல்லயி பேசுகையில், ‘‘அமைச்சா் முகமது ரியாஸ் எனது ஊரைச் சோ்ந்தவா். அவருடைய மனைவி யாா்? இது திருமணமா? இது முறைகேடான உறவு. அத்தகைய உறவை ஐயுஎம்எல் தொண்டா்கள் அனைவரும் தைரியமாக விமா்சிக்க வேண்டும்’’ என்றாா்.
அவருடைய கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து தனது கருத்துக்கு அவா் வெள்ளிக்கிழமை மன்னிப்பு கோரினாா். தனிப்பட்ட வாழ்க்கையில் மதம் தொடா்பான கண்ணோட்டத்தை விளக்குவதற்காக மட்டுமே அவ்வாறு கூறியதாகவும், எவரது மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு கூறவில்லை எனவும் கல்லயி தெரிவித்தாா்.