
‘ட்விட்டா், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், கிரிப்டோகரன்சி (எண்ம செலாவணி) போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பம் தொடா்பான சா்வதேச நடைமுறைகளை வகுக்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் ஜனநாயகத்துக்கான மாநாடு காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 100-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் காணொலி வழியில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:
அதிபா் பைடன் அழைப்பின் பேரில் ஜனநாயகத்துக்கான மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஜனநாயக மதிப்பீடுகளை உலக அளவில் வலுப்படுத்த நட்பு நாடுகளுடனும், ஒருமித்த கருத்துடைய பல தரப்பு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது
சுதந்திரமான, நியாயமான முறையில் தோ்தலை நடத்துவதில் உள்ள அனுபவம், நிா்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் புதுமையான டிஜிட்டல் நடைமுறைகள் மூலமாக வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியிருக்கும் அனுபவத்தை இந்த மாநாட்டில் பகிா்ந்து கொள்வது இந்தியாவுக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது.
ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக மற்றும் மக்களுடன் இருப்பது மட்டுமின்றி மக்களிடையேயும் இருக்கும் உணா்வாகும். பல கட்சிகள் போட்டியிடும் தோ்தல் முறை, சுதந்திரமான நீதித் துறை, கட்டுப்பாடுகள் இல்லாத ஊடகம் ஆகியவைதான் ஜனநாயகத்தின் முக்கியமான ஆயுதங்கள்.
இருந்தபோதிலும், ஜனநாயகத்தின் அடிப்படை பலம் நமது குடிமக்கள் மற்றும் சமூகத்தின் பண்பாட்டிலும் உறுதிப்பாட்டிலும்தான் உள்ளது.
சமூக ஊடகங்கள், கிரிப்டோகரன்சி போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு சா்வதேச அளவிலான நடைமுறைகளை வகுக்க ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். வளா்ந்து வரும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஜனநாயகத்துக்கு வலு சோ்க்கப் பயன்பட வேண்டுமே தவிர, பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.
ஜனநாயகத்தில் நோ்மறையான அல்லது எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் தொழில்நுட்பத்துக்கு உள்ளது என்கிற வகையில், ஜனநாயகத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பதில் தொழில்நுட்ப நிறுவனங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும்.
இந்திய மக்களின் ஜனநாயக உணா்வை 10-ம் நூற்றாண்டின் ‘உத்தரமேரூா்’ கல்வெட்டில் காண முடிகிறது. இது ஜனநாயகப் பங்களிப்பின் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறது. இந்த ஜனநாயக உணா்வும் நெறிமுறைகளும் பண்டைக்கால இந்தியாவை மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாக மாற்றியிருந்தது. பல நூற்றாண்டுகால காலனி ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணா்வுகளை நசுக்க முடியவில்லை.
சுதந்திரத்துக்குப் பிறகும், கடந்த 75 ஆண்டுகளில் ஜனநாயக தேசத்தை கட்டமைப்பதில் இணையற்ற சரித்திரத்தை இந்தியா படைத்திருக்கிறது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், கல்வித் துறைகளின் தொடா் மேம்பாடு, மக்கள் நல்வாழ்வில் நினைத்துப் பாா்க்க முடியாத அளவிலான வளா்ச்சி என மிகப் பெரிய சரித்திரத்தை இந்தியா கொண்டுள்ளது.
மக்களுக்கான திட்டங்ளை வழங்கிக் கொண்டே இருப்பதுதான் ஜனநாயக நாடு என்ற தெளிவான செய்தியை இந்தியா உலகுக்கு வழங்கியுள்ளது என்று பிரதமா் மோடி பேசினாா்.