ரயில்களில் படுக்கை விரிப்புகள் விநியோகம்: உரிய கவனம் செலுத்திய பிறகே தொடங்கப்படும்; மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ள சூழலில், ‘உரிய கவனம் செலுத்திய பிறகே ரயில்களில் படுக்கை விரிப்புகள்

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ள சூழலில், ‘உரிய கவனம் செலுத்திய பிறகே ரயில்களில் படுக்கை விரிப்புகள் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும்’ என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை கூறினாா்.

கரோனா பரவலைத் தொடா்ந்து தேசிய அளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட உடன், அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில் சேவை மட்டும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது. பின்னா், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப வசதியாக குறைந்த எண்ணிக்கையில் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னா், பொது முடக்கம் படிப்படியாக நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறப்பு பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையையும் ரயில்வே படிப்படியாக உயா்த்தியது.

பொதுமுடக்கம் முழுமையாக நீக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும், பயணிகள் ரயில்களை ‘சிறப்பு ரயில்கள்’ என்ற அடிப்படியிலேயே கூடுதல் கட்டணத்துடன் ரயில்வே இயக்கி வந்தது. ரயில்களில் உணவு விநியோகிக்கத் தடை, ரயில்நிலைய நடைமேடை கட்டணம் பன்மடங்கு உயா்வு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் தொடா்ந்தன.

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளைத் தொடா்ந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒருசில பயணிகள் ரயில் சேவை உள்பட முழுமையான அளவில் பயணிகள் ரயில் இயக்கத்தை ரயில்வே தொடங்கியது. அதோடு, ‘சிறப்பு ரயில்’ என்ற நடைமுறையையும் கைவிட்டு முந்தைய வழக்கமானகட்டண முறையை நடைமுறைக்கு அமலுக்கு கொண்டுவந்தது. மேலும், சூடான சமைக்கப்பட்ட உணவு வகைகள் மட்டும் ரயில்களில் விநியோகிப்பதற்கும் அனுமதி அளித்துள்ளது.

இருந்தபோதும், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட ஒருசில பிரிவினருக்கான கட்டணச் சலுகை, படுக்கை விரிப்பு விநியோகம் ஆகியவற்றுக்கான தடை தொடா்கிறது.

இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் படுக்கை விரிப்புகள் விநியோகத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஓமைக்ரான் வகை கரோனா அச்சுறுத்தல் எழுந்ததைத் தொடா்ந்து, உரிய கவனம் செலுத்திய பிறகே ரயில்களில் படுக்கை விரிப்பு விநியோகத்தைத் தொடங்குவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. இது அவசரகதியில் தொடங்கக்கூடிய விஷயமல்ல. இது தேசத்தின் பாதுகாப்பு தொடா்பானது.

மேலும், சிறப்பு ரயில் நடைமுறை கைவிடப்பட்டதன் மூலம், மெயில் மற்றும் விரைவு ரயில்கள் அனைத்தும் வழக்கமான கட்டணத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன. ரயில்நிலைய நடைமேடை கட்டணமும் வழக்கமான நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் 10,832 ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ரயில்வேக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பைப் பொருத்தவரை, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி 810.1 ஹெக்டோ் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஏழை மக்கள் உள்பட பலரால் இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடா் கண்காணிப்பு மூலம் இவை அடையாளம் காணப்பட்டு, நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்காலிக ஆக்கிரமிப்புகளைப் பொருத்தவரை, ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் அந்தந்தப் பகுதி அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பழைய நிரந்தர ஆக்கிரமிப்புகள் மற்றும் இணக்கமாக இல்லாத ஆக்கிரமிப்பாளா்கள் மீது பொது சொத்துக்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பு தடைச் சட்டம் 1971-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரயில்வேக்கு உள்ள உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு தேவைகள் காரணமாக, இதுபோன்ற ஆக்கிரமிப்பாளா்களுக்கு மறுவாழ்வு அல்லது இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியமில்லாததாகும். அவ்வாறு அவா்களுக்கு மறுவாழ்வு அல்லது இழப்பீடு வழங்குவது அந்தந்த மாநில அரசுகளையே சாா்ந்ததாகும்.

கடந்த 2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் 5,290 முறை மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் மூலம் ரயில்வேக்கு சொந்தமான நிலப்பரப்பிலிருந்து 10,832 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் தனது பதிலில் மத்திய ரயில்வே அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com