ஹெலிகாப்டர் விபத்து: சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் மறைவு; தலைவர்கள் இரங்கல்

ஹெலிகாப்டர் விபத்தில் தீவிரமான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் காலமானார்.
கேப்டன் வருண் சிங்
கேப்டன் வருண் சிங்

பெங்களூரு: ஹெலிகாப்டர் விபத்தில் தீவிரமான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் காலமானார்.

தமிழகத்தின், கோவை மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவக்கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைதலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டர் டிச.8-ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய விமானப்படை குரூப் கேப்டன் வருண்சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்திருந்த ஒரே ஒருவர் வருண்சிங் மட்டுமே.

85 சத தீக்காயங்களுடன் ஊட்டியில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வருண்சிங், மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள விமானப்படையின் கமாண்ட் மருத்துவமனையில் டிச.9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு வருண்சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை வருண்சிங் உயிரிழந்தார்.

வருண்சிங்கின் உடல் கமாண்ட் மருத்துவமனையிலிருந்து எலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு விமானப்படைவீரர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், அவரது உடல் சொந்த ஊருக்கு விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதும் இறுதிச்சடங்கு செய்து, குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்படும் என்று விமானப்படையினர் தெரிவித்தனர்.

கேப்டன் வருண் சிங்கின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த்கெலாட், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் மாநிலத்தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குரூப் கேப்டன் வருண் சிங், உயிருக்குப் போராடி இறந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயம் அடைந்திருந்தாலும், வீரனுக்குரிய தீரம் மற்றும் துணிவை வெளிப்படுத்தினார். அவருக்கு தேசம் நன்றி செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த‌ இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றுகூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"குரூப் கேப்டன் வருண் சிங், பெருமிதம், வீரம், மிகுநேர்த்தியுடன் தேசத்திற்கு சேவை செய்துவந்தார். அவரது மறைவால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அவர் (சிங்) தேசத்திற்கு ஆற்றிய செழுமையான சேவையை என்றும் மறக்க முடியாது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனதுஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி." என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் பசவராஜ்பொம்மை தனது சுட்டுரையில்,"குரூப் கேப்டன் வருண்சிங் மறைவு ஆழமான வேதனையை ஏற்படுத்தியுள்ளது. துணிவான வீரரை நாடு இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி." என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com