கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல்: பாஜக, காங்கிரஸ் தலா 11 இடங்களில் வெற்றி

கர்நாடக சட்ட மேலவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தலா 11 இடங்களையும்,  மஜத} 2, சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கர்நாடக சட்ட மேலவைத் தேர்தல்: பாஜக, காங்கிரஸ் தலா 11 இடங்களில் வெற்றி


பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தலா 11 இடங்களையும்,  மஜத} 2, சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் 25 பேர் கர்நாடக சட்ட மேலவையில் உறுப்பினர்களாக உள்ளனர். தேர்தலுக்கு முன், இவர்களில் காங்கிரஸ் 13, பாஜக 6, மஜத 4, சுயேச்சைகள் 2 பேர் அடங்குவர். இவர்களின் பதவிக்காலம் 2022, ஜன. 5}ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இந்த நிலையில், 25 மேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு 20 தொகுதிகளுக்கான தேர்தல் டிச. 10}ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் பாஜக 20 தொகுதிகள், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 20, மஜத 6 தொகுதிகளில் போட்டியிட்டன. சுயேச்சைகள் 54 பேர் உள்பட 20 தொகுதிகளில் மொத்தம் 90 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 89 பேர் ஆண்கள்,  ஒருவர் பெண்.

இத் தேர்தலில் 99.80 சதவீதம் பேர் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 20 மையங்களில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே பாஜக, காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வந்தனர். மஜதவுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை.

2015}ஆம் ஆண்டு நடைபெற்ற 25 இடங்களுக்கான சட்ட மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் 13, பாஜக 6, மஜத 4,  சுயேச்சை 2 பேர் வெற்றிபெற்றிருந்தனர். இதை ஒப்பிடுகையில், பாஜக ஏற்கெனவே வென்ற 6  இடங்களை தக்கவைத்துக் கொண்டு கூடுதலாக 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ், மஜத ஏற்கெனவே வென்றிருந்த இடங்களில் தலா 2 இடங்களை இழந்துள்ளன. வாக்குகள் எண்ணிக்கை முடிவில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தலா 11, மஜதவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.

இரட்டை வேட்பாளர் தொகுதிகளில் தென் கன்னடம், தார்வாட்,  விஜயபுரா, ஒற்றை வேட்பாளர் தொகுதிகளில்  குடகு, பெங்களூரு, சிக்கமகளூரு, சிவமொக்கா, சித்ரதுர்கா, பெல்லாரி, கலபுர்கி, வட கன்னடம் ஆகிய 11 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 

அதேபோல இரட்டை வேட்பாளர் தொகுதிகளில் விஜயபுரா, மைசூரு, பெலகாவி, தென்கன்னடம், தார்வாட் மற்றும் ஒற்றை வேட்பாளர் தொகுதியில் கோலார், பெங்களூரு ஊரகம், மண்டியா, தும்கூரு, ராய்ச்சூரு, பீதர் ஆகிய 11 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இரட்டை வேட்பாளர் தொகுதியில் மைசூரு, ஒற்றை வேட்பாளர் தொகுதியில் ஹாசன் ஆகிய 2 தொகுதிகளில் மஜத வென்றுள்ளது. பெலகாவி இரட்டை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் லக்கன் ஜார்கிஹோளி வென்றிருக்கிறார்.

கூடுதல் இடங்கள்: 75 பேர் கொண்ட சட்ட மேலவையில் பாஜகவுக்கு தற்போது 32 இடங்கள் உள்ளன. சட்ட மசோதா சொந்த பலத்தில் நிறைவேற்ற பாஜகவுக்கு 38 இடங்கள் தேவைப்பட்டன. பெரும்பான்மை பலம் இல்லாததால் பசுவதை தடைச் சட்டத்தை சட்ட மேலவையில் நிறைவேற்ற ஆளும் பாஜக தடுமாறியது. மேலும், மேலவைத் தலைவர் பதவியை காங்கிரஸிடம் இருந்து பறிக்க, அப் பதவியை மஜதவுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது. இந்த நிலையில், சட்ட மேலவைத் தேர்தலில் 11 இடங்களில் வென்றுள்ளதன் மூலம் தனது பலத்தை 37 ஆக உயர்த்திக் கொண்டுள்ளது.


பெலகாவி தொகுதியில் இரண்டாவது இடத்தில் வெற்றிபெற்றுள்ள சுயேச்சை வேட்பாளர் லக்கன் ஜார்கிஹோளி, பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியின் சகோதரர். அந்தவகையில், சட்ட மேலவையில் பாஜகவின் பலம் 38 என்று எடுத்துக் கொள்ளலாம். அதனால் சட்டங்களை நிறைவேற்றுவதில் இனி எவ்வித தடையும் இருக்காது. மேலும், மேலவைத் தலைவர் பதவியும் பாஜகவுக்கு கிடைக்கும்.

காங்கிரஸ் பலம்: ஏற்கெனவே வென்ற 2 தொகுதிகளை இழந்திருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் பலம் குன்றவில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 

மஜத பலமாக உள்ள கோலார், தும்கூரு, மண்டியா, மைசூரு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. வழக்கம்போல வட கர்நாடகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது.

மஜதவுக்கு பின்னடைவு: இந்தத் தேர்தலில் மஜதவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மண்டியா, பெங்களூரு ஊரகம், தும்கூரு, கோலார், மைசூரு ஆகிய 5 தொகுதிகளும் மஜதவின் கோட்டையாக இருந்து வந்தன. அந்த 5 தொகுதிகளையும் மஜத இழந்துள்ளது. ஹாசன் தொகுதியில் மட்டுமே மஜத வென்றுள்ளது. 

மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெüடாவின் சொந்தத் தொகுதியான தும்கூரில் மஜத படுதோல்வி அடைந்துள்ளது அக்கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015}ஆம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் காங்கிரஸ், மஜத தலா 2 இடங்களை இழந்துள்ளன. 
இதன்மூலம் 75 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையில் பாஜகவுக்கு 37, காங்கிரஸூக்கு 26, மஜதவுக்கு 11, சுயேச்சை ஒரு உறுப்பினர்கள் உள்ளனர்.


செல்வந்தர்களின் கூடாரமாக சட்டமேலவை மாறி வருகிறது: அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா


பெலகாவி: சிந்தனையாளர்கள், அறிவாளிகளின் மன்றமாக விளங்கிய சட்டமேலவை தற்போது செல்வந்தர்களின் கூடாரமாக மாறிவருவது வேதனை அளிக்கிறது என்று கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

இதுகுறித்து பெலகாவியில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சட்டமேலவை தேவையா? தேவையில்லையா என்ற விவாதங்கள் நடந்துவருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சட்டமேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இத்தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ. ஒரு லட்சம் வரை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எல்லா கட்சிகளும் அடக்கம். அதனால் தான் சட்டமேலவை தேவையா என்று நான் ஏற்கெனவே கேட்டிருந்தேன். சட்டமேலவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பணம் செலவழிக்கப்படுவது தேவைதானா என்பது குறித்து அனைத்துக் கட்சிகளும் சிந்திக்க வேண்டும். 

சட்டமேலவைத் தேர்தலில் பணம் வாரி இறைக்கப்படுவதைப் பார்த்தால் தேர்தல் ஆணையம் உயிர்ப்போடு இருக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் சிந்தனையாளர்கள், அறிவாளிகளின் மன்றமாக விளங்கிய சட்டமேலவை தற்போது செல்வந்தர்களின் கூடாரமாக மாறிவருகிறது. இது வேதனை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com