
ஸ்ரீதரன்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட மெட்ரோ மனிதர் என அறியப்படும் ஸ்ரீதரன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியவர் ஸ்ரீதரன். மெட்ரோ மனிதர் என பரவலாக அறியப்படும் ஸ்ரீதரன் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் அமையக் காரணமானவர். கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுமுன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து பாஜக வேட்பாளராக பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம் அறிமுகம்
இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், “நான் 90 வயதை நெருங்கிவிட்டேன் என பலருக்கும் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தபோது வருத்தமடைந்தேன். ஆனால் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரால் எதுவும் செய்யமுடியாது என்பதை புரிந்துகொண்ட பின் தற்போது வருத்தமடைவதில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த ஸ்ரீதரன், “நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலிலிருந்து விலகினாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் லவ் ஜிகாத், மாட்டிறைச்சி தடை உள்ளிட்ட விவகாரங்களில் ஸ்ரீதரன் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.