
கோப்புப்படம்
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முகலாயப் பேரரசர்களான ஔரங்கசீப், ஷாஜஹான் குறிப்புகளை நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை, தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த மனு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக் கூடியது எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரர் உடனே இதைத் திரும்ப பெற வேண்டும் என எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து, மனுதாரரால் இந்தப் பொதுநல மனு திரும்பப் பெறப்பட்டது.
விசாரணையின்போது குறிப்பிட்ட நீதிபதிகள், "கோயில் பழுதுபார்ப்பு போன்றவற்றுக்கு மானியம் கொடுப்பதில் ஷாஜகானுக்கும் ஔரங்கசீபுக்கும் அத்தகைய கொள்கை இல்லை என்பது உங்கள் பிரச்னை என சொல்கிறீர்கள்.
எங்களால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய கொள்கைகளையே தீர்மானிக்க முடியவில்லை. அப்படியிருக்கையில், ஷாஜகான் மற்றும் ஔரங்கசீபின் கொள்கைகள் பற்றி நாங்கள் முடிவு செய்ய வேண்டுமா? உயர் நீதிமன்றம் முடிவு செய்யுமா?
இதையும் படிக்க | பெண்களின் திருமண வயதை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்
இத்தகைய பொதுநல வழக்குகள் போடுவதற்குப் பதிலாக, மனுதாரர் வரி ஏய்ப்பு தொடர்பான மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்கள்.
சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள் என்ற பகுதியில், அனைத்து முகலாய பேரரசர்களும் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் மானியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாஜகான் மற்றும் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலங்களைக் குறிப்பிடுகிறது.
மேலும், நூலில், போர்களின்போது கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும், பின்னர் அவற்றைப் பழுதுபார்க்க மானியங்கள் வழங்கப்பட்டதாகவும் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை உண்மையல்ல என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.