
உச்சநீதிமன்றம்
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு தமிழக அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் ஆஜராகிய தமிழக அரசு வழக்கறிஞர், “வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதால், மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு, பணி நியமனம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், “உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தற்போதைக்கு தடை விதிக்க விரும்பவில்லை. மேலும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஏற்கனவே நடைபெற்ற மாணவர் சேர்க்கை, பணி நியமனத்தில் மாற்றம் செய்யக் கூடாது. வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை புதிதாக மாணவர் சேர்க்கை, பணி நியமனம் செய்யக் கூடாது என்றனர்.”
மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 15, 16 தேதிகளுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.