பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி; தில்லி கலவர வழக்கில் கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபய் வர்மா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கடந்த 2020ஆம் ஆண்டு, வெறுப்பை தூண்டும் வகையில் பேசி தில்லியில் கலவரத்தை தூண்டியதாக பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில், பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபய் வர்மா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து முடிவு எடுக்க தில்லி உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்க வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் தாமதப்படுத்துவதாக கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், "தில்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பான சம்பவங்களை விசாரிக்க சுதந்திரமான சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். தில்லியில் உள்ள அலுவலர்களை தவிர்த்து மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களை விசாரணை அலுவலர்களாக நியமிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், "மனுதாரர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஜாமியா மாணவர்களுக்கு என்ன நீதி? தில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதி? மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விஷயங்களை முடிவெடுக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் முன்னதாக அறிவுறுத்திய போதிலும், உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை தாமதப்படுத்துகிறது" என்றார்.

வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "இந்த மனுவை விரைவாக, மூன்று மாத காலத்திற்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம்" என உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com