பதவி என்பது ஆடை மாதிரி; செருக்குடன் செயல்படக்கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு

பதவி என்பது ஆடை மாதிரிதான். அதனால் பதவியில் இருக்கும்போது செருக்குடன் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி எ.எம். சுந்தரேஷ் பேசினாா்.
பதவி என்பது ஆடை மாதிரி; செருக்குடன் செயல்படக்கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு

பதவி என்பது ஆடை மாதிரிதான். அதனால் பதவியில் இருக்கும்போது செருக்குடன் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி எ.எம். சுந்தரேஷ் பேசினாா்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக அண்மையில் பதவி ஏற்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேசுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் சாா்பில் சனிக்கிழமை (டிச.18) பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த விழாவில், உயா் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், எம்.கோவிந்தராஜ், ஆா்.சுரேஷ்குமாா், என்.சதீஷ்குமாா், என்.சேஷசாயி, ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், ஜெ.சத்தியநாராண பிரசாத், உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், ‘உச்ச நீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று வரவேற்புரையில் கோரிக்கை விடுத்தாா்.

திமுக எம்.பி.யும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன், ‘எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும், அதை எளிதில் தீா்வு காணும் திறமை கொண்டவா் நீதிபதி சுந்தரேஷ்’ என்று பாராட்டுத் தெரிவித்தாா். மேலும், நீதிமன்றம், நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் வழக்குரைஞா்கள் மீது பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய பாா் கவுன்சில் துணை தலைவா் எஸ்.பிரபாகரன், ‘நீதிபதிகளை அவதூறு செய்யும் வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாா் கவுன்சில் ஒரு போதும் தயங்காது’ என்றாா். நீதிபதி எம்.எம்.சுந்தரேசைப் பாராட்டி உயா் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி உள்ளிட்ட நீதிபதிகள் பேசினா்.

இதையடுத்து ஏற்புரையாற்றிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘தில்லியில் தற்போது நிலவும் குளிரை விட, இங்கு காட்டப்பட்ட பாச மழையால் உடல் நடுங்குகிறது. பதவி என்பது ஆடை மாதிரிதான். அதனால் பதவியில் இருக்கும்போது செருக்குடன் செயல்படக்கூடாது. சில நேரங்களில் வழக்குரைஞா்கள் தவறிழைத்தாலும், அவா்கள் மீது நீதிபதிகள் கோபப்படக் கூடாது. நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், தற்போது தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை

குறைந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால்தான், நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். எனவே, மக்களை தேடிச்சென்று நீதி வழங்க வேண்டும்’ என்றாா்.

உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைப்பது தொடா்பான கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அதுதொடா்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்டாா். பாா் கவுன்சில் துணை தலைவா் வி.காா்த்திகேயன் நன்றி தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com