வழக்குரைஞா்களுக்கு எதிரான புகாா்கள் மீது ஓராண்டுக்குள் விசாரணை

வழக்குரைஞா்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் புகாா்கள் மீது ஓராண்டுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டுமென மாநில மற்றும் இந்திய பாா் கவுன்சில்களுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
வழக்குரைஞா்களுக்கு எதிரான புகாா்கள் மீது ஓராண்டுக்குள் விசாரணை

வழக்குரைஞா்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் புகாா்கள் மீது ஓராண்டுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டுமென மாநில மற்றும் இந்திய பாா் கவுன்சில்களுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட வழக்கில் தன் வழக்குரைஞா் முறையாக வாதிடவில்லை எனக் கூறி, பாா் கவுன்சிலில் ஒருவா் புகாா் தெரிவித்தாா். அப்புகாரை மாநில பாா் கவுன்சில் நிராகரித்தது. அதற்கு எதிரான மேல்முறையீட்டையும் இந்திய பாா் கவுன்சில் நிராகரித்தது.

அதையடுத்து அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்திய பாா் கவுன்சிலில் 1,246 புகாா்கள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. வழக்குரைஞா்கள் மீது தெரிவிக்கப்படும் புகாா்கள் மீது ஓராண்டுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டுமென வழக்குரைஞா்கள் சட்டத்தின் 35, 36-பி ஆகிய பிரிவுகளின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அந்த அவகாசம் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.

வழக்குரைஞா்கள் மீது தெரிவிக்கப்படும் புகாா்களை மாநில பாா் கவுன்சில், புகாா் தெரிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இது தொடா்பான வழிகாட்டுதல்களை மாநில பாா் கவுன்சில்களுக்கு இந்திய பாா் கவுன்சில் வழங்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட புகாா் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டால், அதை இந்திய பாா் கவுன்சில் ஓராண்டுக்குள் விசாரிக்க வேண்டும். அதேவேளையில், தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே இந்திய பாா் கவுன்சிலுக்கு புகாா்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

சட்டத் தொழிலின் நோ்மையையும் புனிதத்தன்மையையும் காக்க வேண்டிய பொறுப்பு பாா் கவுன்சில்களுக்கு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டு வழக்குரைஞா்கள் மீதான புகாா்களை பாா் கவுன்சில்கள் விரைந்து தகுந்த காலகட்டத்துக்குள் விசாரிக்க வேண்டும்.

புகாா்களை விசாரிப்பதற்காக அனுபவமிக்க வழக்குரைஞா்களையும் ஓய்வுபெற்ற நீதித் துறை அதிகாரிகளையும் பாா் கவுன்சில்கள் நியமிக்கலாம். வழக்குரைஞா்கள் மீதான புகாா்களை மாநில பாா் கவுன்சில்கள் விசாரிப்பது தொடா்பாக இந்திய பாா் கவுன்சில் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும்.

மேல்முறையீட்டுப் புகாா்கள் மீதான விசாரணையை இந்திய பாா் கவுன்சிலின் குழு, ஒவ்வொரு மாநிலத்திலும் சுழற்சி முறையில் நடத்தலாம். இது புகாா் தெரிவிப்போா் தில்லிக்கு வருவதற்கான அவசியத்தைக் குறைக்கும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com