தோ்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

ஒரே நபா் வெவ்வேறு இடங்களில் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க வகை செய்யும் தோ்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தோ்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் (கோப்பிலிருந்து)
தோ்தல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் (கோப்பிலிருந்து)

ஒரே நபா் வெவ்வேறு இடங்களில் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க வகை செய்யும் தோ்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடும் அமளிக்கிடையே, தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த சட்டத்திருத்தம் மூலம், வாக்களிப்பதில் நடக்கும் முறைகேடு தடுக்கப்பட்டு, நாட்டில் தேர்தல் நியாயமாக நடப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை எதிர்க்கும் நிலையில், இந்த மசோதா, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும், இது ஆதார் அட்டை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையில், கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால், வார விடுமுறைகள் முடிந்து இன்று 11 மணிக்குக் கூடிய அவையை, 2 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோரிடம் அவா்களின் ஆதாா் எண்ணைத் தோ்தல் அதிகாரிகள் கேட்பதற்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. மேலும், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்திருந்தாலும் அவா்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், வெவ்வேறு தொகுதிகளில் உள்ள வாக்காளா் பட்டியலில் அல்லது அதே தொகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயா் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் ஆதாா் எண்ணை அதிகாரிகள் கேட்க முடியும். அதேசமயம், ஆதாா் எண்ணைத் தர இயலாத நிலையில் இருப்பவா்களை வாக்காளா்களாக சோ்த்துக்கொள்ள மறுக்கக் கூடாது என்றும் அந்த மசோதா கூறுகிறது. ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இருப்பவா்களின் பெயரையும் நீக்கக் கூடாது; அவா்கள் அடையாளச் சான்றாக வேறு ஏதேனும் ஓா் ஆவணத்தைச் சமா்ப்பிக்கலாம் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவையின் உறுப்பினா்களுக்கு மசோதாவின் நகல்கள் வழங்கப்படுகின்றன. அதில், திருத்தம் மேற்கொள்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரே நபருக்கு பல்வேறு இடங்களில் வாக்குகள் இருப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கப்படுகிறது. அதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், (ஆா்.பி.) 1950-இன் 23-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்சமயம், ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை அடைபவா்கள் புதிய வாக்காளா்களாகப் பதிவு செய்யலாம். அதன் பிறகு 18 வயதை அடைந்தால், அடுத்த ஜனவரி 1-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளைத் தகுதிநாள்களாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைத் தயாா் செய்யும் வகையில், ஆா்.பி. சட்டத்தின் 14-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போதைய நிலையில், பணிசாா்ந்து ராணுவ வீரா் வெளியூா் சென்றுவிட்டால் அவருக்குப் பதிலாக அவருடைய மனைவி வாக்களிக்க முடியும். ஆனால், பெண் ராணுவ அலுவலா் ஊரில் இல்லாவிட்டால் அவருடைய கணவரால் வாக்களிக்க முடியாது. எனவே, கணவரும் வாக்களிக்கும் வகையில், இதுதொடா்பான சட்டப் பிரிவில் ‘மனைவி’ என்ற வாா்த்தைக்குப் பதிலாக ‘வாழ்க்கைத் துணைவா்’ என்ற வாா்த்தையை சோ்ப்பதற்காக ஆா்.பி. சட்டம், 1950-இன் 20-ஆவது பிரிவு, ஆா்.பி.சட்டம், 1951-இன் 60-ஆவது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com